மதுரை

கருத்துரிமையைத் தடுப்பது ஜனநாயக விரோதம்: கேரள சட்டப் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன்

DIN

மதத்தின் பெயரால் கருத்துரிமையை தடுப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என கேரள சட்டப் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மற்றும் காந்தி பாலகேந்திரா ஆகியவை சார்பில் மதுரையில் காந்தியடிகள் அரையாடைக் கோலத்துக்கு மாறிய தினத்தை நினைவு கூரும் வகையிலான கருத்தரங்கம் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கேரள முன்னாள் அமைச்சர் ஏ.நீலலோகிததாசன் தலைமை வகித்தார். வி.சுதாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேரள சட்டப் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் பேசியதாவது: நமது நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களில் தனித்துவமிக்க தலைவர்கள் சிலரே. அதில் காந்தியடிகளின் உண்மையான முதல்நிலைத் தொண்டராக காமராஜர் விளங்கினார். அவரைப் போல கேரளத்தில் நம்பூதிரிபாட் போன்றோர் திகழ்ந்தனர். தமிழர் என்ற அடையாளத்தை மக்களுக்கு கொடுத்ததில் ஈ.வெ.ராமசாமி பெரியாருக்கு பெரும்பங்குண்டு.
தற்போது ஆன்மிகத்தை மதம் எனும் பெயரில் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மத நம்பிக்கை எனும் பெயரில் உத்தரப் பிரதேசத்தில் பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி பல அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் எந்தத் தகவலை வேண்டுமானாலும், எப்போதும் பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், நமக்குத் தேவையானது சமூக ஒற்றுமையில் வளர்ச்சி என்பதாகும். அதைப் பெறுவதற்கு காந்தியடிகள், காமராஜர் போன்றோரின் சமத்துவக் கொள்கைகள் முக்கியமாகும். ஒவ்வொருவரும் தமது விருப்பத்துக்கு ஏற்ப கலாசாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை பின்பற்றவும், அதுகுறித்து விவாதிக்கவும் உரிமை உண்டு. அதைத் தடுப்பது சரியல்ல. மதத்தின் பெயரில் கருத்துரிமையை தடுக்கும் வகையில் சிலர் செயல்படுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றார்.
அமர்வுக்கு தலைமை வகித்து உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆர்.காந்தி பேசியது: காந்தியக் கொள்கைகளை கட்சியிலும், ஆட்சியிலும் சிறப்பாக செயல்படுத்தியவர் காமராஜர். தற்கால உலகத் தேவையாக காந்தியடிகளின் அகிம்சை அத்தியாவசியமாகிறது. அமைதி வளர்ச்சிக்கு காந்தியம் அவசியமாகிறது என்றார்.
நிகழ்ச்சியில் நாடார் மகாஜனசங்க பொதுச் செயலர் ஜி.கரிக்கோல்ராஜ், தேசிய நீர்வழிச்சாலை அமைப்பாளர் ஏ.சி.காமராஜ், காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் எம்.பி.குருசாமி, பேராசிரியர் ஆர்.பொண்ணு, கே.ஜான்குமார் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜமீலாபிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காமராஜர் மத நல்லிணக்க பேரவை டி.பிரபாகர் வரவேற்றார். இ.அருண்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT