மதுரை

திருவாதவூர் திருமறைநாதர் கோயிலுக்கு தயாராகும் உலா வாகனங்கள் 

DIN


திருவாதவூரில் உள்ள திருமறைநாதர்  கோயிலுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் சுவாமி, அம்பாள் எழுந்தருளும் உலா வாகனங்கள் சிற்பிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் கோயில் உள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயிலாக இக்கோயில் உள்ளது.  63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர்  அவதரித்த திருத்தலமாகவும் இருப்பதால் இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் திருவிழாக்களின்போது, சுவாமி, அம்மன் எழுந்தருளக் கூடிய வாகனங்கள் பழுதடைந்து இருந்தன. இதனால் சுவாமி, அம்மன் வாகனங்களில் எழுந்தருள இயலாத நிலை நீடித்து வந்தது. 
இதையடுத்து சுவாமி அம்மன் எழுந்தருளும் வாகனங்களை உருவாக்க மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தங்கள் விடப்பட்டன. தமிழக திருக்கோயில்களில் திருத்தேர்கள் மற்றும் பூத வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற சிற்பி ரவி என்பவரிடம் ரூ.6 லட்சம் மதிப்பில் வாகனங்கள் உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. 
 இதைத்தொடர்ந்து  சிற்பி ரவி தலைமையில் மரச்சிற்பங்கள் செதுக்கும் பணியில் அனுபவமுள்ள குழுவினர் திருமறைநாதர் கோயிலுக்கு வாகனங்கள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருமறைநாதர் கோயிலில் விரைவில் நடைபெற உள்ள பிரமோற்சவத்தின்போது சுவாமி, அம்மன் எழுந்தருளும் வகையில் வாகனங்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மதுரை எல்லிஸ்நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வரும் இந்தப்பணியில் முதற்கட்டமாக ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், யாளி வாகனம் உள்ளிட்ட  4 வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
சுவாமி, அம்மன் வலம் வரும் வாகனங்கள் என்பதாலும், வாகனங்கள் நீடித்து உழைக்க வேண்டும் என்பதாலும் அத்தி மரங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களில் வர்ணங்கள் பூசும் பணி விரைவில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வாகனமும் சுமார் 350 கிலோ முதல் 400 கிலோ வரை  எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 
வாகனங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிற்பி ரவி கூறியது:  தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சுவாமி உலா வரும் வாகனங்கள்,  நிலைக்கதவுகள், தேர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பாகுபலி திரைப்படத்துக்காக பல்வேறு சிலைகளை உருவாக்கி கொடுத்துள்ளோம். தற்போது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு தேவையான வாகனங்களை உருவாக்கி வருகிறோம். விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT