மதுரை

நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

DIN

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் திமுக பிரமுகர் அட்டாக்பாண்டி உள்பட  9 பேருக்கு தலா 3 ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
 கடந்த 2007ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மதுரையில்  உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் அலுவலக ஊழியர்கள் கோபி, வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ போலீஸார்,  திமுக பிரமுகர் அட்டாக்பாண்டி, திருச்செல்வம், ஆரோக்கியபிரபு, சரவணமுத்து உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இச் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதையை  காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த மதுரை  மாவட்ட நீதிமன்றம், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அட்டாக்பாண்டி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. 
இந்த தீர்ப்பை எதிர்த்து 2010 ஆம்  ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அதில்,  ஒத்தக்கடை  காவல் சார்பு ஆய்வாளர் ஆலடியாரின் சாட்சியத்தை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் முற்றிலுமாக நிராகரித்து இருக்கக்கூடாது. அவர் அடையாள அணிவகுப்பின்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டவில்லை என்று கூறுவது தவறானது.  இந்த வழக்கில் சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ்சாட்சியாக மாறிய போதிலும், 
விடியோ, நாளிதழ்களின் புகைப்பட ஆதாரம் போன்ற தொழில்நுட்ப சாட்சியங்களை  நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. குற்றம் நடந்ததற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. 
 எனவே மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் வியாழக்கிழமை இவ்வழக்கில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: அட்டாக்பாண்டி,  ஆரோக்கியபிரபு,  விஜயபாண்டி,  கந்தசாமி,  ராமையாபாண்டி,  சுதாகர்,  திருமுருகன்,  ரூபன்,  மாலிக்பாட்ஷா ஆகிய 9 பேருக்கும் தலா 3 ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனையை  ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் மார்ச் 25 ஆம் தேதி ஆஜராக வேண்டும். அப்போது அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து தெரிவிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 வழக்கில் தொடர்புடைய திருச்செல்வம், முருகன், ரமேஷ்பாண்டி, வழிவிட்டான், தாயமுத்து ஆகியோருக்கு மாவட்ட நீதிமன்றம் அளித்த விடுதலையை நீதிபதிகள்  உறுதிசெய்தனர். வழக்கு நிலுவையில் இருந்தபோது சரவணமுத்து இறந்துவிட்டார். பெட்ரோல் குண்டு வீச்சின் போது  உயிரிழந்த, ஊழியர்கள் வினோத்,  கோபி,  முத்துராமலிங்கம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு  தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT