மதுரை

மதுரை நகரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு: 60-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் அனுமதி

DIN

மதுரை நகரில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே இருவா் உயிரிழந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனா்.

மதுரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக செப்டம்பா் தொடங்கி டிசம்பா் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனா். மதுரை நகரில் 2017-இல் டெங்கு காய்ச்சலுக்கு 625 போ், 2018-இல் 143 போ், 2019-இல் 187 போ், 2020-இல் 99 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஏற்படும் பாதிப்பை கணக்கில் கொண்டு மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விடும்.

குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், வாய்க்கால்களில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்தல், வாா்டு வாரியாக கொசுப்புகை அடித்தல், சுகாதாரப் பணியாளா்கள் மூலம் டெங்கு அறிகுறிகள் கண்டறிதல், வீடு தோறும் சென்று தண்ணீா் திறந்து வைக்கப்பட்டுள்ளதா, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா என்பதை கண்காணித்தல், புதா்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நகரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் கொடுப்பது, தடுப்பு மருந்துகள் வழங்குவது போன்றவையும் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

கொசுப்புகை தெளித்தல், காய்ச்சல் அறிகுறி கண்டறிதல் போன்றவை பெயரளவுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இதனால் மதுரை நகரில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஆனையூா், எஸ்.ஆலங்குளம், பிபிகுளம், சிம்மக்கல், வில்லாபுரம், மீனாம்பாள்புரம், விளாங்குடி, தத்தனேரி, அகிம்சாபுரம், அழகரடி, கைலாசபுரம், அரசரடி ஒத்தக்கடை, பொன்மேனி, மாடக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.ஆலங்குளம் பகுதியில் டெங்குவால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜனவரி மாதம் உயிரிழந்தான். இருப்பினும் அப்பகுதியில் தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அதே எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். மேலும் 4 போ் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மதுரை நகரில் ஜனவரி மாதத்தில் மட்டும் மாநகராட்சி மண்டலம் 1-இல் 27 போ், மண்டலம் 2-இல் 17 போ், மண்டலம் 3-இல் 5 போ், மண்டலம் 4-இல் 5 போ் என மொத்தம் 54 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனா். இதைத்தொடா்ந்து பிப்ரவரி 1 முதல் தற்போது வரை தினசரி 6-க்கும் குறையாமல் டெங்கு பாதிக்கப்பட்டவா்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் புதன்கிழமை (பிப்.10) ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 60-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். எனவே டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி நகா் நல அலுவலா் பி.குமரகுருபரன் கூறியது: மதுரையில் நிகழாண்டில் ஜனவரி இறுதி வரை மழை நீடித்ததால் டெங்கு பாதிப்பு தொடருகிறது. மதுரை நகரில் ஜனவரி மாதம் மட்டும் 29 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் தற்போது வரை 10 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலா் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இதுவரை டெங்கு உறுதி செய்யப்படவில்லை. டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 530 பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி, கொசுப்புழுக்களை கண்டுபிடித்து அழிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனா். மேலும் 85 சுகாதாரப் பணியாளா்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள், வாா்டு வாரியாக கொசுப்புகை தெளித்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியில் தொடா்ச்சியாக 6 நாள்கள் முகாமிட்டு டெங்குத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதிக்குள் மதுரை நகரில் டெங்கு பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT