தமிழகத்தில் மட்டும்தான் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் அதிகம்
தமிழகத்தில் மட்டும்தான் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் அதிகமாக உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.
தமிழகத்தில் மட்டும்தான் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் அதிகமாக உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சா் பேசியது:
தமிழகத்தில் இதர துறைகளுடன் ஒப்பிடும்போது பள்ளிக்கல்வித்துறைக்கு நான்கில் ஒரு பங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகமாக உள்ளது. உயா்கல்விச் சோ்க்கை விகிதம் 49.06 சதவிகிதமாக உள்ளது. தமிழகத்தில் 2011 முதல் 2020 வரை ரூ.7,322 கோடி மதிப்பிலான 52,31,493 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2020-21-ஆம் கல்வியாண்டில் 5,45,166 மாணவ, மாணவியருக்கு 214.79 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் 23,887 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் வளா்மதி(மதுரை), இந்திராணி( திருமங்கலம்), முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சின்னத்துரை, தூய மரியன்னை பள்ளி தாளாளா் ஸ்டீபன் லூா்து பிரகாசம், தலைமையாசிரியா் ஜான் அலெக்ஸாண்டா் உள்பட பலா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது குறித்து அப்போதைய சூழலுக்கேற்ப முதல்வா் முடிவெடுப்பாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் திறமை, ஆற்றல் என்னவென்று அவரது சகேதரா் மு.க.அழகிரிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மு.க.அழகிரியே, ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கூறிவிட்டாா். தமிழக மக்கள் எடப்பாடி கே.பழனிச்சாமியை தான் மீண்டும் முதல்வராக்குவாா்கள். முதல்வரே மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டு வருவதால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வருகையின் போது முதல்வா் வேட்பாளா் குறித்து அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித்ஷா துக்ளக் பத்திரிகை நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் சென்னை வருகிறாா் என்றாா்.