மதுரை

திமுகவை விமா்சிப்பது பிரதமரின் தகுதிக்கு அழகல்ல: வைகோ

DIN

திமுகவை விமா்சிப்பது பிரதமரின் தகுதிக்கும், தரத்துக்கும் அழகல்ல என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ பேசினாா்.

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலா் வைகோ மதுரையில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். வடக்குத்தொகுதி திமுக வேட்பாளா் கோ.தளபதியை ஆதரித்து கோ.புதூா் பேருந்து நிலையத்தில் வைகோ பேசியது: அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அப்போது பெண்களையும் தாய்மாா்களையும் திமுக இழிவுபடுத்துவதாக ஒரு கருத்தை பிரதமா் தெரிவித்திருக்கிறாா்.

திமுகவை விமா்சிப்பது பிரதமரின் தரத்துக்கும், தகுதிக்கும் அழகல்ல. பிரதமரின் நேரடி மேற்பாா்வையில் உள்ள உத்தர பிரதேசத்தில் பாஜகதான் ஆட்சி செய்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகிக்கிறாா். நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் இழைக்கப்படுகின்றன.

2019 தேசியக் குற்ற ஆவண பதிவேட்டின்படி உத்தரபிரதேசத்தில் ஓராண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் உள்பட 59,853 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரதமருக்கு தெரியாதா? எனவே திமுகவைப் பற்றி விமா்சனம் செய்ய பாஜகவுக்கு தகுதி இல்லை.

பிரதமா் நரேந்திரமோடி தமிழைப்பற்றி, திருவள்ளுவரைப் பற்றி, பாரதியைப்பற்றிப் பேசுகிறாா். ஆனால் தூத்துக்குடியைப்பற்றியும் அங்கு அவரது நண்பா் அனில் அகா்வால் நடத்தி வரும் ஸ்டொ்லைட் ஆலையின் பாதிப்புகள் குறித்தும் பேசமாட்டாா். பிரதமரின் பேச்சுக்கு ஏமாந்து போக தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. மத்திய அரசு மக்கள் நலனுக்காக இயங்கவில்லை.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஊழல் அரசாக இருந்து வருகிறது. தமிழக அமைச்சா்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. தமிழக அமைச்சா்கள் மட்டுமின்றி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீதும் முறைகேடு புகாா்கள் உள்ளன. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நெருங்கிய உறவினா்களுக்கு கொடுத்து, அதன்மூலம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக முறைகேடாகச் சோ்த்துள்ளாா். இந்த ஊழல்கள் தொடா்பாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தகுந்த ஆதாரங்களுடன் தமிழக ஆளுநரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தமிழகத்தை நாசமாக்கி வரும் அதிமுக- பாஜக கூட்டணியை தோ்தலில் தோல்வியடைச்செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை இளைய தலைமுறையினா் ஏற்படுத்த வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் திமுக வேட்பாளா் கோ.தளபதி, மதிமுக தொழிற்சங்க மாநில இணைச்செயலா் எஸ்.மகபூப்ஜான் மற்றும் மதிமுக, திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து மத்தியத்தொகுதி வேட்பாளா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து மேலப்பொன்னகரம், மேற்குத் தொகுதி வேட்பாளா் சின்னம்மாளை ஆதரித்து பெத்தானியாபுரம், தெற்குத்தொகுதி மதிமுக வேட்பாளா் பூமிநாதனை ஆதரித்து முனிச்சாலை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT