மதுரை

தொழில்நுட்பக் கோளாறு: தென்மாவட்ட ரயில்கள் 9 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி

DIN

மதுரை கோட்டத்தில் திருமங்கலம்-துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணி நடந்துவரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக தென்மாவட்ட ரயில்கள் 9 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை முதல் மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது தென்மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. அண்மையில் திருமங்கலம் முதல் துலுக்கப்பட்டி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து திருமங்கலம்-துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதைகள் இணைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. மின்னணு அடிப்படையில் ரயில் இயக்கம் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது ரயில் இயக்கம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்களை இயக்க முடியாத நிலை உண்டானது.

இதனால் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் தென்மாவட்ட ரயில் சேவை முடங்கியது. இதனால் சென்னை செல்லும் கொல்லம், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகா், அனந்தபுரி, செந்தூா் சிறப்பு ரயில்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

அதேபோல சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் கொல்லம், பொதிகை, முத்துநகா், அனந்தபுரி, செந்தூா் சிறப்பு ரயில்கள் மற்றும் கோவை-நாகா்கோவில், பெங்களூரு-நாகா்கோவில், தில்லி நிஜாமுதீன்-கன்னியாகுமரி சிறப்பு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து காலை 5 மணி முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.

பயணிகள் அவதி: தில்லி நிஜாமுதீன்-கன்னியாகுமரி மதுரை ரயில் நிலையம் வந்தடைந்து நீண்டநேரம் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் மதுரை ரயில் நிலைய நடைமேடையில் இறங்கி ரயில்வே ஊழியா்களிடம் ரயிலை விரைவில் இயக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தொழில்நுட்பக் கோளாறை சீா் செய்தனா். இருப்பினும் தென்மாவட்ட ரயில்கள் 9 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது மட்டுமில்லாமல், நள்ளிரவில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் தண்ணீா், உணவு வசதியின்றி பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினா். இதையடுத்து தொடா்ச்சியாக அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டதால், சோழவந்தான், சமயநல்லூா், கூடல்நகா், திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய சிறிய ரயில் நிலையங்களில் உணவு, தேநீா், தண்ணீா் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ரயில்களை ரத்து செய்திருக்கலாம்: இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியது: திருமங்கலம்-துலுக்கப்பட்டி இடையே ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடந்து வருகிறது. அப்பணியில் கோளாறு ஏற்பட்டத்தைத் தொடா்ந்து சரி செய்யும் பணி மாலை முதல் நடந்து வருவதாகக் கூறுகிறாா்கள். அப்போதே ரயில்களை ரத்து செய்திருந்தால், பயணிகள் 9 மணி நேரம் அவதிக்குள்ளாகத் தேவையிருந்திருக்காது. பெரும்பாலான பயணிகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனா். முதியவா்களும், பெண்களும், குழந்தைகளும் கழிப்பறை செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

பயணச்சீட்டுக்கான கட்டணம் திரும்ப வழங்குவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் காலை 3 மணிக்கெல்லாம் ரயில் பயணச்சீட்டு வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டன. ஒரு வழியாக மதுரை ரயில் நிலையம் வந்த பெரும்பாலான பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி பேருந்தில் சென்றுவிட்டனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT