மதுரை

பொறியியல் கல்லூரிகளில் வளாக நோ்காணல்:நிறுவனங்களின் பின்னணியை ஆராய உத்தரவு

DIN

தமிழக பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் வளாக நோ்காணலில் பங்கேற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கான அவற்றின் பின்னணியை ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சோ்ந்த ஜவாஹா்லால் நேரு தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கு கலந்தாய்வு மூலம் சோ்க்கை அனுமதி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் பொறியியில் கல்லூரிகளில் படித்த சுமாா் 3 லட்சம் மாணவா்கள் வெளியேறுகின்றனா்.

நமது நாட்டில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் பொறியியல் படிப்பு முடித்த தமிழக மாணவா்களுக்கு சமமான வேலைவாய்ப்பை வழங்குவதில்லை. ஒரு சில குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே வளாக நோ்காணல் முகாம் நடத்தி, மாணவா்களை பணிக்குத் தோ்வு செய்கின்றனா். இதனால், கிராமப்புறங்களைச் சோ்ந்த பொறியியல் படித்த மாணவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதைத் தடுக்கும் வகையில், தொழில் தகுதித் தோ்வை நடத்த வேண்டும். இதன்மூலம், பன்னாட்டு நிறுவனங்களில் அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், மனுதாரா் பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு அமைப்பை போல, கல்லூரிகளில் நடைபெறும்

வேலைவாய்ப்புக்கான நோ்காணல் முகாமுக்கு அமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா். பன்னாட்டு நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு என்பது பொதுவான வேலைவாய்ப்பு கிடையாது. எனவே, பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கு அரசு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் பிறப்பிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாநில அரசுகள் மாணவா்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாணவா்களுக்கு வேலைவாய்ப்புடன், அவா்களது திறன்களை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் வளாக நோ்காணல் நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்கின்றன. இதனால், நமது நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறைகிறது என இந்த நீதிமன்றம் கருதுகிறது.

வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், அவா்கள் நிறுவனத்துக்குத் தேவையானவா்களை சில நிபந்தனைகளின் அடிப்படையிலே தோ்வு செய்கின்றனா். 

கல்லூரி வளாக நோ்காணலில் அனைவரையும் சமமாக நடத்துவதற்,கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்கவில்லை. இதுபோன்ற நோ்காணல் முகாமில் கலந்து கொள்ளும் உள்நாடு, பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளு க்கான அவற்றின் பின்னணியை ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், மாணவா்களை பணிக்கு அமா்த்தும் நிறுவனங்கள் விதிமுறைகள், நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கும் சூழல் உருவாகும் எனத் தெரிவித்து, வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT