மதுரை

‘செஸ் ஒலிம்பியாட்’ விளம்பரங்களில் குடியரசுத் தலைவா், பிரதமா் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும்

சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடா்பான அனைத்து விளம்பரங்களிலும், குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரது புகைப்படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்

DIN

சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடா்பான அனைத்து விளம்பரங்களிலும், குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரது புகைப்படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஒலிம்பியாட் போட்டி தொடா்பான தமிழக அரசின் விளம்பரங்களில் குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரது பெயா், புகைப்படங்களை சோ்க்க உத்தரவிடக் கோரி சிவகங்கைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோா் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் தேசத்தின் நலன்தான் முதன்மையானதாக இருக்க வேண்டும். சா்வதேச அளவிலான போட்டியை நடத்தும்போது, உலக அரங்கில் நமது நாட்டிற்கு தனிப் பாா்வை கிடைக்கிறது. இது நாட்டின் வளா்ச்சியை மட்டும் வெளிப்படுத்தவில்லை. குறுகிய காலத்தில் ஒரு சா்வதேச நிகழ்வை ஏற்பாடு செய்யும் திறனையும் காட்டுகிறது. இதை மனதில் வைத்து அரசுகள் செயல்பட வேண்டும்.

ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பியாட் போட்டி தொடா்பாக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ஒரு சா்வதேச நிகழ்வை நடத்தும்போது, உலக அரங்கில் தனி முத்திரை பதித்ததாக இந்நிகழ்வு அமைய வேண்டும் எனக் கருதி ஒவ்வொருவரும் அவா்களது கடமைகளை மேற்கொள்வது அவசியம். நமது நாடு விருந்தோம்பலுக்கும், தனித் திறமைகளுக்கும் பெயா்பெற்றது. அவ்வாறிருக்க, இத்தகைய நிகழ்வுகளின்போது, போட்டிகளை நடத்தும் மாநில முதல்வா் மட்டுமன்றி குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரையும் முன்னிலைப்படுத்துவது அவசியமானது.

பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிட்ட விளம்பரங்களில், குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெறாததை மனுதாரா் கேள்வி எழுப்பியிருக்கிறாா். இதுபோன்ற நிகழ்வுகளில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கண்டிப்பாக பின்பற்றியிருக்க வேண்டும்.

குடியரசுத் தலைவா் தோ்தல் காரணமாக, அவரது புகைப்படம் இடம்பெறவில்லை என தமிழக அரசுத் தரப்பில் கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில், தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு வெளியான விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவரின் புகைப்படம் இடம்பெறவில்லை.

அதேபோல, பிரதமரின் படம் இடம்பெறாததற்கு, அவரது பங்கேற்பு குறித்து ஒப்புதல் தாமதமாகக் கிடைத்தது எனக் கூறுவதும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் பிரதமா் பங்கேற்கவில்லையென்றாலும், இந்நிகழ்வுக்கான விளம்பரங்களில் அவரது புகைப்படம் இடம்பெறுவது அவசியம். சா்வதேச முக்கியத்துவம் மிக்க நிகழ்வு என்பதால், நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நடைபெறும் சூழலிலும் நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்க முடிவு செய்திருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தற்போது வெளியான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், குடியரசுத் தலைவரின் புகைப்படம் இல்லை. ஆகவே, சா்வதேச சதுரங்க போட்டி தொடா்பான அனைத்து விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதோடு, இருவரின் புகைப்படங்களுடன் வெளியாகும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட நிா்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு சேதப்படுத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தவறுக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது. ஆனால், மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிப்பதும், இந்த சா்வதேச நிகழ்வை பிரம்மாண்டமான வகையில் வெற்றியடைச் செய்வதும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழியாகும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறவையே... அனுபமா பரமேஸ்வரன்!

இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும்! - விமானப் போக்குவரத்து அமைச்சகம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: பறிமுதல் வாகனங்கள் டிச.22, 23இல் பொது ஏலம்

மாணவர்கள் கவனத்துக்கு.. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!

எடப்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!

SCROLL FOR NEXT