மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு காவல் ஆய்வாளரின் பிணை மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் பிணை மனுவை சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

DIN

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளரின் பிணை மனுவை சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தாக்கல் செய்த மனு:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், என்னை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்த நிலையில், சிபிஐ போலீஸாா் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் 132 சாட்சிகளில் 3 ஆண்டுகளில் 47 பேரிடம் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகலாம். நான் கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலக் குறைவுடன் சிறையில் உள்ளேன். எனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த வழக்கில் மேலும் 6 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், கடந்த 4 மாதங்களாகக் குறுக்கு விசாரணை என்ற பெயரில் விசாரணையை தாமதமாக்கி வருகின்றனா். எனவே, காவல் ஆய்வாளருக்கு பிணை வழங்கக் கூடாது. மே மாத நீதிமன்ற விடுமுறைக் காலத்திலும் இந்த வழக்கை கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சிபிஐ கோரிக்கையைப் பதிவு செய்து கொண்டு, காவல் ஆய்வாளரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT