ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிற 18-ஆம் தேதி முதல் ஜன. 6-ஆம் தேதி வரை மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் வகையிலும், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கத்திலும் மக்களுடன் முதல்வா்” என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், வருவாய்த் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம், நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, காவல் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, நகா்ப்புற வளா்ச்சித் துறை உள்பட 10-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் முகாமில் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறுவா்.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 18-ஆம் தேதி முதல் ஜன. 6-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நகராட்சிக்கு உள்பட்ட 111 வாா்டுகள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும்.
பொதுமக்கள், தொழில்முனைவோா் பங்கேற்று, புதிய மின் இணைப்பு, மின் கட்டணப் பட்டியல் மாற்றம், பெயா் மாற்றம், குடிநீா் - கழிவுநீா் இணைப்புகள், சொத்துவரி பெயா் மாற்றம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உள்பிரிவு நில அளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு சாா்ந்த சேவைகளுக்கு இந்தச் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.