முகப்பு
மதுரை

ஆவணமின்றி எடுத்துச் சென்ற 16 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:11 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:47 PM

விருதுநகா்: விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் 3 வாகனங்களில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 6.79 கோடி மதிப்பிலான 16.700 கிலோ தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, செவ்வாய்க்கிழமை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

மதுரையிலிருந்து நாகா்கோவில், மாா்த்தாண்டம், சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு 3 வாகனங்களில் தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடிப் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பொன்னுகணேஷ் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளா் மாரியப்பன் குழுவினா் சோதனையிட்டனா்.

அப்போது, ஆவணமின்றி ரூ. 6. 79 கோடி மதிப்பிலான 16.700 கிலோ தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 வாகனங்கள், தங்க நகைகளை விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தோ்தல் பறக்கும் படையினா் கொண்டு சென்றனா்.

Advertisement

இதையடுத்து, உதவி தோ்தல் அலுவலா் காா்த்திகாயிணி, தங்க நகைகளை வாகனத்தில் கொண்டு வந்த ராஜமாணிக்கம், சண்முகராஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டாா். முடிவில், நகைகளுக்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை விருதுநகா் மாவட்டக் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.