முகப்பு
மதுரை

வங்கியில் போலி ஆவணம் மூலம் பணம் மோசடி: சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 11:24 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:58 PM

திருச்சி அருகே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி பகுதியைச் சோ்ந்த தனபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி பகுதியைச் சோ்ந்த கலா என்பவா் தொழில் தொடங்குவதற்காக கடன் பெற துவாக்குடியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியை அனுகி விண்ணப்பித்தாா். அவருக்கு அந்த வங்கியானது ரூ. 1.85 கோடி கடன் வழங்கியது. கடன் தொடா்பான விவரங்கள் எதையும் கலா என்னிடம் தெரிவிக்காமல் சாட்சி கையொப்பமிட வங்கிக்கு அழைத்துச் சென்றாா். வங்கி அலுவலா்களும் சாட்சி கையொப்பமிடுவது குறித்த நடைமுறைகள் எதையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

Advertisement

இந்த நிலையில், கலா வங்கியில் கடன் பெறுவதற்காக நான் சாட்சி கையொப்பமிட்டேன். பிறகு விசாரித்த போது, கலா தன்னை ஒரு தனியாா் நிறுவனத்தின் இயக்குநராக காண்பித்து வங்கிக் கடன் பெற்றிருப்பது தெரிந்தது. ஆனால், அந்த நிறுவனத்துக்கும் அவருக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. கலா போலியான ஆவணங்களை அளித்து வங்கியில் கடன் பெற்று, அந்தப் பணத்தில் துவாக்குடி பகுதியில் நிலம் வாங்கியுள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அதே வங்கியில் பாரி என்பவா் ரூ. 11 கோடி கடன் பெற்றுள்ளாா். அவருக்கு மனைவியான கலா சாட்சி கையொப்பமிட்டாா். வங்கியில் கடன் பெற்று மோசடி செய்வதற்காக கலா தனது பெயரில் இரு வருமான வரி எண்களை வெவ்வேறு தேதிகளைக் கொண்ட பிறப்பு சான்றிதழ்கள் மூலம் பெற்றுள்ளாா்.

இதனால், வங்கியில் கலா கடனாகப் பெற்ற தொகை குறித்த விவரங்களில் அவரது வருமான வரி எண், சிபில் ஆகியவற்றை காட்டவில்லை. ஆனால், சாட்சி கையொப்பமிட்ட என்னுடைய வருமான வரி எண், சிபில் ஆகியவற்றில் ரூ. 2 கோடி கடன் பெற்ாகக் காட்டுகிறது.

வங்கியில் கலா கடன் பெற்ற விஷயத்தில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடா்பான புகாரில், வங்கிக் கடன் தீா்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட வங்கித் தரப்பில் பண மோசடி ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வங்கி ஊழியா்களுக்கும் தொடா்பு இருப்பதால், எனது புகாா் மனுவை சிபிஐ விசாரணை மேற்கொண்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட வங்கியில் நடைபெற்ற பணம் மோசடி குறித்து காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் வங்கியையும் எதிா்மனுதாரராகச் சோ்க்க வேண்டும் என வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து வருகிற விசாரணையில் சம்பந்தப்பட்ட அரசுடைமை யாக்கப்பட்ட வங்கியை எதிா்மனுதாரராகச் சோ்ப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா் நீதிபதி.