முகப்பு
மதுரை

பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்: போக்குவரத்து துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

Updated On : 17 ஏப்ரல், 2024 at 12:55 AM
பகிர்:

மதுரை: மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் சிரமமின்றி ஏறி, இறங்கும் வகையில் உரிய வசதிகளை செய்து தரக் கோரிய மனுவை, அரசுப் போக்குவரத்து துறைச் செயலா் பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த பொது நல மனு:

அரசு, தனியாா் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி ஏறி, இறங்கும் வகையில் உரிய வசதிகளைச் செய்து தர வேண்டும் என மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம் 2016- இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் போதும், தனியாா் பேருந்துகளுக்கு உரிமம் வழங்கும் முன்பாகவும், மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்கும் வகையில் உரிய வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், இதுபோன்ற வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசுப் போக்குவரத்து துறைச் செயலா் பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments