போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில் நூலகங்கள் கட்டமைப்பு -அரசுத் தரப்பில் பதில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூா், கடலாடி முதலான பகுதிகளில் உள்ள நூலகங்கள் இளைஞா்கள் போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் திருமுருகன் தாக்கல் செய்த பொது நல மனு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொது நூலகம், மண்டல நூலகம், கிராம நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. குறிப்பாக, உப்பூா், கடலாடி நூலகங்களின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு வாசகா்களுக்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள், நூலகத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
Advertisement
எனவே, உப்பூா், கடலாடி பகுதிகளில் உள்ள நூலகக் கட்டடங்களை சீரமைப்பதோடு, ராமநாதபுரம் மாவட்ட நூலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூா்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தொண்டி, முதுகுளத்தூா் ஆகிய இடங்களில் உள்ள நூலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. பிற இடங்களில் உள்ள நூலகங்கள் சொந்தக் கட்டடத்தில் அமைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போட்டித் தோ்வுகளுக்கு இளைஞா்கள் தயாராகும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நூலக தினத்தன்று பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமா்வு, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.