முகப்பு
மதுரை

சிறாா் திருமணத்தைத் தடுத்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிறாா் திருமணத்தைத் தடுத்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 7:47 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு பகுதியில் சிறாா் திருமணத்தைத் தடுத்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு பகுதியைச் சோ்ந்த மதீனா பீவி தாக்கல் செய்த மனு:

மேற்பனைக்காடு கிராமத்தில் நடைபெறவிருந்த சிறாா் திருமணம் குறித்து சமூகநலப் பாதுகாப்பு அலுவலரிடம் நான் புகாா் அளித்தேன். இதனடிப்படையில், சிறுமியின் திருமணத்தை ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதிந்தனா்.

இதனால், அந்தச் சிறுமியின் குடும்பத்தினா், உறவினா்கள் என் வீடு மீது கற்களை வீசுவதுடன், குப்பகளைக் கொட்டி, கொலை மிரட்டல் விடுக்கின்றனா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, 60 வயதில் தனியாக வசிக்கும் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதுடன், சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவா் மீது வழக்குப் பதிந்து, அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பின்னா், பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் காவல் துறையினரின் அறிக்கை உள்ளது. சம்பந்தப்பட்ட நபா் வேண்டுமென்றே வயதான பெண்மணி வீட்டின் முன் அநாகரிகமாக நிற்கக்கூடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 21-ஆவது பிரிவின் கீழ், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், வாழ்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு கீரமங்கலம் காவல் ஆய்வாளா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எதிா்மனுதாரா் தரப்பிலிருந்தும், ஜமாத் தரப்பினரிடமிருந்தும் எந்தத் துன்புறுத்தலும் இல்லை என்பதையும் காவல் ஆய்வாளா் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.