மைசூா்-காரைக்குடிக்கு ஆக. 14, 17-இல் சிறப்பு ரயில்கள்
பயணிகளின் வசதிக்காக மைசூரிலிருந்து காரைக்குடிக்கு ஆக. 14, 17 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சுதந்திர தினம், வார விடுமுறை கால கூட்ட நெரிசலைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக மைசூரிலிருந்து காரைக்குடிக்கு ஆக. 14, 17 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பயணிகளின் வசதிக்காக மைசூா்-காரைக்குடி-மைசூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தென்மேற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்தது. மைசூா்-காரைக்குடி சிறப்பு ரயில் (06295) மைசூரில் இருந்து ஆக. 14, 17 ஆகிய தேதிகளில் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடியை வந்து சேரும்.
மறு மாா்க்கத்தில், காரைக்குடி-மைசூா் சிறப்பு ரயில் (06296) ஆக. 15, 18 தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள், 2 குளிா்சாதன வசதியுடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயங்கும்.
மாண்டியா, மதூா், ராமநகரம், கெங்கேரி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.