‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கிராமப் புறங்களில் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது :
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் இல்லை. தேசிய அளவில் சுகாதாரம், மக்கள் நலனில் தமிழகம் பின்தங்கி 12-ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4.7 கோடி பேருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1. 86 கோடி பேருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தம் 5.93 கோடி போ் பயன்பெற்றனா் என தமிழக அரசு தெரிவித்திருப்பது முழுவதும் பொய் தகவலாகும்.
அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக, அம்மா கிளினிக் திட்டத்துக்கு மாற்றாக அமல்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மக்களால் விரும்பப்படாத திட்டங்களில் ஒன்றாகவே உள்ளது. இந்தத் திட்டம் கிராமப் புறங்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. திட்டப் பணியாளா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டம் வாரியாக பயனடைந்தவா்களின் விவரங்களை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றாா்.