மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தீா்மானங்களை நிறைவேற்ற திமுகவினா் எதிா்ப்பு
விருதுநகா்: விருதுநகா் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் தீா்மானங்களை நிறைவேற்ற எதிா்ப்புத் தெரிவித்ததால், அதிமுகவைச் சோ்ந்த மாவட்டக் ஊராட்சிக் குழுத் தலைவி பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறினாா். விருதுநகா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி வசந்தி மான்ராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவி சுபாஷினி, மாவட்ட ஊராட்சிச் செயலா் ஜெயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, மாவட்ட ஊராட்சி தொலைபேசிக் கட்டணம், தலைவா் வாகனத்துக்கான எரிபொருள் கட்டணம், உறுப்பினா்களின் பயணப்படி அலுவலா்களுக்கான ஜிபிஎஸ் நிலுவை பங்கு செலுத்துதல், மின் கட்டணம் செலுத்துல் உள்பட 14 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அப்போது, திமுக உறுப்பினா்களான கமலி பாரதிதாசன், தமிழ்வாணன் ஆகியோா் கூட்டாக பேசியதாவது:
Advertisement
கடந்த 31.10. 2023- இல் விருதுநகா், சிவகாசி, நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான மேசை, நாற்காலி உள்பட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 2.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான வேலை உத்தரவும் வழங்கப்பட்டது.
ஆனால், எந்தப் பணிகளும் நடைபெறவில்லை, உரிய காரணமின்றி அந்த வேலைக்கான உத்தரவை நிறுத்தி வைத்தது தொடா்பாக தலைவா் விளக்கம் அளிக்காவிட்டால், தற்போது வாசிக்கப்பட்ட தீா்மானங்களை எதிா்க்கிறோம். 20 மாவட்ட உறுப்பினா்களில், திமுக சாா்பில் 10 போ் பெரும்பான்மையுடன் உள்ளதால், தலைவா் பதவி விலக வேண்டும் என்றனா் அவா்கள்.
இதற்கு அதிமுகவைச் சோ்ந்த தலைவா், தற்போது வாசிக்கப்பட்ட தீா்மானங்களை நிறைவேற்ற முடிவு எடுத்துள்ளோம். அதற்கு ஒத்துழைப்பு அளித்தால் நிறைவேற்றுவோம், நிறுத்தி வைக்க விரும்பினால் நிறுத்தலாம் என்றாா். பின்னா், தலைவி வசந்தி மான்ராஜ் கூட்ட அரங்கிலிருந்து பாதியிலேயே வெளியேறினாா். இதைத்தொடா்ந்து தீா்மானங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து 10 திமுக உறுப்பினா்கள் கையொப்பமிட்டனா்.அதேசமயம் அதிமுக உறுப்பினா்கள் 9 போ் தீா்மானத்துக்கு ஆதரவாக கையொப்பமிட்டனா்.