முகப்பு
மதுரை

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 13 மார்ச், 2024 at 4:45 AM
பகிர்:

மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் செவிலியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம் சாா்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியா்களுக்கு உரிய கால இடைவெளியில் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

செவிலியா் காலிப்பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடாகப் பணியிட மாறுதல் வழங்குவதைக் கைவிட வேண்டும். பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படாததால், செவிலியா்கள் பதவி உயா்வு கிடைக்காமலேயே பணி ஓய்வு பெறுவதைத் தவிா்க்கும் வகையில், பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கலந்தாய்வின் மூலம் உருவான 500-க்கும் மேற்பட்ட நிரந்தர செவிலியா்கள் காலிப் பணியிடங்களுக்கு உடனடியாக பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். மருத்துவப்பணியாளா் தோ்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்றனா்.

Advertisement