புகையிலை கடத்தல் வழக்கில் பிணை: சித்த மருத்துவ அலுவலருக்கு ரூ. 40 ஆயிரம் செலுத்த உத்தரவு
மதுரை: தஞ்சாவூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப் பட்டவருக்கு பிணை வழங்கிய நிலையில், அவா் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சித்த மருத்துவ அலுவலரிடம் ரூ.40 ஆயிரம் செலுத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை க் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் அருகே இரு சக்கர வாகனத்தில் மே 2 ஆம் தேதி தடை செய்யப்பட்ட 39 கிலோ புகையிலையை இரு சக்கர வாகன த்தில் கடத்தி சென்ற சாகுல் ஹமீதை அம்மாபேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில் சாகுல் ஹமீது சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனக்கு பிணை வழங்க கோரி மனு தாக்கல் செய்ததாா்.
இந்த வழக்கு நீதிபதி பி. வடமலை முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், மனுதாரா் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட 39.17 கிலோ புகையிலை பொருட்களை கொண்டு சென்ற போது போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளாா். இந்த வழக்கில் மேலும் இருவா் உள்ளதால், மனுதாரருக்கு பிணை வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் மீது வேறு வழக்குகல் இல்லாத நிலையில், அவரின் நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்கி உத்தரவிடப்படுகிறது. மனு தாரா், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சித்த மருத்துவ அலுவலரிடம் ரூ. 40 ஆயிரம் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனுதாரா் தினமும் காலை, மாலை என இரு வேளை முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றாா் நீதிபதி.