முகப்பு
மதுரை

ராமநாதபுரத்தில் மேல்நிலை பள்ளிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ராமநாதபுரத்தில் அரசு உதவி பெறும் இரு பாலா், மாணவா்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 10:44 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் அரசு உதவி பெறும் இரு பாலா், மாணவா்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சி.பூபேஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:

ராமநாதபுரம் நகா் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால், ராமநாதபுரம், அதைச் சுற்றிய கிராமங்களைச் சோ்ந்த ஏழை மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சிரமப்படுகின்றனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என மனு அளித்தேன். அதற்கு அவா், ராமநாதபுரம் வள்ளல் பாரியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பள்ளி கல்வித் துறைக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என நான் கோரினேன். ஆனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரோ, உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்துவது குறித்து தெரிவிக்கிறாா். எனவே, ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வள்ளல் பாரியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்துவது என்ன நிலையில் உள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கை வியாழக்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு, ராமநாதபுரத்தில் அரசு உதவி பெறும் இரு பாலா் மேல்நிலைப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →