திமுகவுக்கு தமிழகத்தின் நலனில் சிறிதும் அக்கறையில்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுகவின் 54-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது :
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிப்பதற்குள் கல்வியாண்டு தொடங்கியது.
இதனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 162-ஆவது பிரிவைப் பயன்படுத்தி, அந்தச் சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரச் செய்தாா் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. மாணவா்களின் கல்வி நலனுக்கு முன் தன்னுடைய முதல்வா் பதவி பெரிதல்ல எனக் கருதியதே அவரது துணிச்சலான முடிவுக்கு காரணம்.
ஆனால், திமுக ஆட்சியில் தமிழக நலன் குறித்து சிந்திக்கப்படுவதேயில்லை. சொத்துவரி, மின் கட்டண உயா்வு குறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசு நிதி தராததே காரணம் என்கிறாா் தமிழக நிதியமைச்சா்.
கல்வி நிதி, வளா்ச்சி நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி ஆகியன மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்கிறாா் அவா். மாநில நலன் குறித்து அக்கறையில்லாமல் மத்திய அரசுடன், திமுக பகைமை பாராட்டுவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
39 மக்களவை உறுப்பினா்களைக் கொண்டுள்ள திமுகவால் ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை தமிழகத்துக்குப் பெற முடியவில்லை. ஆனால், தனிநபராக தில்லிக்குச் சென்ற எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்துக்கான ஊரக வேலை உறுதித் திட்ட நிதியாக ரூ. 2,999 கோடியைப் பெற்றுத் தந்தாா்.
திமுக அரசின் மெத்தனத்தால் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி மூலம் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது, மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். மாநில வளா்ச்சிக்கான அனைத்து நிதிகளும் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் என்றாா் அவா்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் முத்தையா, அதிமுக பேச்சாளா்கள் தாஜ்குமாரி, தூத்துக்குடி கருணாநிதி, அஜித், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தவசி, தமிழரசன், நீதிபதி, கருப்பையா, மாணிக்கம், வாடிப்பட்டி பேரூா் செயலா் அசோக், மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றியச் செயலா்கள் கலந்து கொண்டனா்.