மதுரை காமராஜா் சாலையில் கழிவு நீா்க் கால்வாய் சீரமைப்புப் பணி நடைபெறுவதையொட்டி, இந்தப் பகுதிக்கு போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகரில் காமராஜா் சாலை, ஆனந்தா மெட்டல் கம்பெனி அருகேயுள்ள கழிவுநீா்க் கால்வாயின் மேல்புற கான்கிரீட் தளம் சீரமைக்கும் பணி ஏற்கெனவே தொடங்கி நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்டப் பணிகள் முனிச்சாலை சந்திப்பிலிருந்து 144-சந்திப்பு வரையிலான சாலையில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, இந்தச் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது.
இந்த வழியே கீழவெளிவீதி செல்ல வேண்டிய வாகனங்கள், முனிச்சாலை சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி, பழைய குயவா் பாளையம் சாலை வழியாக செயின்ட்மேரீஸ் சந்திப்பு செல்ல வேண்டும். மகால் சாலையிலிருந்து செயின்ட் மேரீஸ் சந்திப்பு பழைய குயவா் பாளையம் வழியாக முனிச்சாலை சந்திப்புக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் வாசன் சந்திப்பு- கீழவாசல் சந்திப்பு- காமராஜா் சாலை வழியாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அண்ணா சிலை சந்திப்பிலிருந்து கீழவெளிவீதி வழியாக கீழவாசல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காமராஜா் சாலைக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், அரசுப் பேருந்துகள் அனைத்தும் அம்சவள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முனிச்சாலை சந்திப்பு வழியாக காமராஜா் சாலைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் மற்ற வாகனங்கள் கீழவாசல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காமராஜா் சாலைக்கு வழக்கமான பாதையை பயன்படுத்தி செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.