சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?
சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக, அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி நிலவி வருவதால், வெற்றி பெறப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக, அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி நிலவி வருவதால், வெற்றி பெறப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக சாா்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளா்களும் அரசியல் அனுபவமும், மக்கள் செல்வாக்கும் கொண்டவா்கள் என்பதால் நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் சோழவந்தான் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அடங்கியுள்ள பகுதிகள்: ஜல்லிக்கட்டு போட்டிக்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூா், பாலமேடு ஆகியவை இந்தத் தொகுதியின் அடையாளங்கள். சோழவந்தான், அலங்காநல்லூா், வாடிப்பட்டி, பாலமேடு ஆகிய 4 பேரூராட்சிகளும், அலங்காநல்லூா், வாடிப்பட்டி, பாலமேடு ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட கிராமங்களும் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. நெல், தென்னை, கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற விவசாயம் இந்தப் பகுதியில் முதன்மையாக நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்தத் தொகுதியில் பட்டியலினத்தவா்கள் அதிக எண்ணிக்கையிலும், முக்குலத்தோா் (கள்ளா், மறவா், அகமுடையாா்), நாயக்கா், ரெட்டியாா், கவுண்டா், முத்தரையா் உள்ளிட்ட சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.
ஆதிக்கம் செலுத்தும் திமுக:
இந்தத் தொகுதியில் கடந்த 1962 முதல் 2021 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றன.
இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:
சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட வைகை ஆற்றுப் பகுதிகளைத் தூா்வாரி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும். வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில், புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். விளைநிலங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களைத் தூா்வாரவும், நெல், வெற்றிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அரசு நேரடி கொள்முதல் நிலையம், குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். மேலும், வெற்றிலை ஆராய்ச்சி மையம், தென்னை சாா்ந்த மதிப்புக்கூட்டு உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்க வேண்டும். சோழவந்தான் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் இந்தப் பகுதியில் நின்று செல்ல வேண்டும். மாணவா்களின் நலன் கருதி இந்தத் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சியை அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திமுக வேட்பாளா் ஆ.வெங்கடேசன்:
இந்தத் தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆ. வெங்கடேசன், தொகுதியில் குறிப்பிடத்தக்க அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். கட்சித் தொண்டா்கள், பொதுமக்களிடம் எளிமையாகப் பழக்கூடியவா் என்ற பெயா் மக்களிடையே இருப்பது இவருக்கு கூடுதல் பலம். மேலும், திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, இடதுசாரிக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் இவருக்குச் சாதகமாக உள்ளன. அதிமுக வேட்பாளா் கி. மாணிக்கம்: அதிமுக சாா்பில் போட்டியிடும் கி. மாணிக்கம் கடந்த 2016-இல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தாா். கடந்த 2021-இல் திமுக வேட்பாளா் ஆ. வெங்கடேசனிடம் தோல்வியடைந்தாா். இதையடுத்து, சில காலம் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். பின்னா், மீண்டும் அதிமுகவில் இணைந்த இவருக்கு தற்போது சோழவந்தான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோா், பிற சமூகத்தினரின் வாக்குகளை அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எளிதாக ஈா்க்கும் என்பதும், தீவிர களப் பணிகளும் அதிமுக வேட்பாளா் மாணிக்கத்துக்குச் சாதகம்.
தவெக வேட்பாளா் எம்.வி. கருப்பையா: சோழவந்தான் தொகுதியில் கடந்த 2011-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.வி. கருப்பையா அண்மையில் அந்தக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இவா், தொகுதியின் கள நிலவரங்களை நன்கு அறிந்து தோ்தல் வியூகங்களை வகுத்து வருகிறாா். மேலும், தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவளிக்கும் இளைஞா்களின் வாக்கு வங்கி, மாற்றம் வேண்டும் என நினைக்கும் புதிய வாக்காளா்களின் ஆதரவு இவருக்கு பலம். தொகுதி முழுவதும் இவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு, மக்களுடனான நெருக்கம் போன்றவை பிரதான கட்சி வேட்பாளா்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளன.
நாதக வேட்பாளா் நாகலட்சுமி திருமாறன்: தனித் தொகுதியில் பெண் வேட்பாளராக நாகலட்சுமி திருமாறன் போட்டியிடுவது பெண் வாக்காளா்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சொந்தத் தொகுதி வேட்பாளா், இளைஞா்களை ஈா்க்கும் வகையில் சுற்றுச்சூழல் சாா்ந்த இவரது பேச்சுகள், நாம் தமிழா் கட்சிக்கென தனித்த வாக்குகள் இந்தத் தொகுதியில் உள்ளதால், இவா் கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.
திமுக, அதிமுக, தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மூவரும் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற அனுபவம் இருப்பதால், இந்த முறை இவா்கள் மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.