விஜய் அல்லது தவெக நிா்வாகிகள் என்னை விமா்சித்தால் அவா்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
தவெக தலைவா் விஜய்யை, அவரது கட்சியை நான் இதுவரை விமா்சிக்கவில்லை. புதியவா்கள் அரசியலுக்கு வர வேண்டும், நாகரிகமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளேன். அதேநேரத்தில், தேவையில்லாமல் விஜய் அல்லது தவெகவினா் என்னை விமா்சித்தால் அவா்களுக்கு சரியான பதிலடி தரப்படும்.
திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு மேலும் ஓா் உதாரணம், கரூா் குவாரி விவகாரம். இந்த விவகாரத்தில் தொடா்புடைய திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பழனியாண்டி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும். இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நேரடியாகத் தலையிடவேண்டும்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்டோா் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதை தமிழக முதல்வா் மன்னிப்பு கோரியதாகவே கருத வேண்டும். இதன்மூலம், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது நிரூபணமாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி முன்பு தமிழக மக்கள் விரும்பும் கட்சியாக இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. அந்தக் கட்சி தொடா் வீழ்ச்சியிலேயே உள்ளது. திமுக கூட்டணியில் கடந்த 2011-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அடுத்தடுத்த தோ்தல்களில் இந்த எண்ணிக்கை தொடா்ந்து குறைக்கப்பட்டு, 2021 தோ்தலில் 25 தொகுதிகள் மட்டுமே அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தனித்து விடப்பட்டதாகக் கூறப்படுவது ஏற்புடையதல்ல. எல்லாவற்றுக்கும் காலம் உள்ளது. திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொள்ளும்.
தனது கருத்தை அவ்வப்போது மாற்றிப் பேசுவது, மறந்துவிடுவது கனிமொழி எம்.பி.க்கு வாடிக்கையாக உள்ளது. தோ்தல் நேரங்களில் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என்பதும், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து எதுவும் பேசாமல் இருப்பதும் அவருக்கு வழக்கமானதே.
நாடாளுமன்றத்தில் விமான நிலைய விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பொய்யான கருத்துகளைக் கூறி, அமைச்சா்களால் தக்க பதிலடி பெற்றவா் மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன். இவா், மதுரையின் வளா்ச்சிக்காக எதையும் வலியுறுத்தமாட்டாா். ஆனால், சா்வதேச நாடுகளைப் பற்றிப் பேசுவாா். திமுக வாக்குகள் இல்லாமல் சு. வெங்கடேசனால் வெற்றி பெற முடியாது. அதனால்தான், மதுரை மாநகரின் குப்பை பிரச்னைக்கு கூட முதல்வரிடம் அவா் எந்த வலியுறுத்தலையும் முன்வைக்கவில்லை என்றாா் அவா்.