முகப்பு
மதுரை

சிறுபான்மையினா் மீது வெறுப்பு பிரசாரத்தை பரப்புகின்றனா்: கி. வீரமணி

சிறுபான்மையினா் மீது பாஜகவினா் வெறுப்பு பிரசாரத்தை பரப்புவதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 22 ஜனவரி, 2026 at 5:32 AM
மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. உடன் (இடமிருந்து) கல்லூரி பேராசிரியைகள் ஜோஜி ரஞ்சிதா ஜெபசெல்வி, மொ்சி பாக்கியம், கல்லூரி முதல்வா் ஆா். பியூலா ஜெயஸ்ரீ, முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் துணைத் தலைவரும், வரலாற்றுப் பேராசிரியருமான ஏ. கருணாநந்தன், இணைச் செயலா் எம். தேன்மொழி, வழக்குரைஞா் மதிவதனி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 9:57 PM

சிறுபான்மையினா் மீது பாஜகவினா் வெறுப்பு பிரசாரத்தை பரப்புவதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி குற்றஞ்சாட்டினாா்.

மதுரை டோக்பெருமாட்டி மகளிா் கல்லூரி முதுகலை வரலாற்று ஆராய்ச்சித் துறை, திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி ‘இந்தியாவின் வரலாற்றை சிதைவுகளிலிருந்து மீட்டெடுத்தல்’ என்ற தலைப்பிலான மாநில மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

Advertisement

வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகம்தான் முதன்மையானது எனக் குறிப்பிடப்பட்டது. கீழடி அகழாய்வுக்குப் பிறகு அந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வின் முதல் மூன்று கட்ட முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. பல நூற்றாண்டுகளாகத் திட்டமிட்டு வரலாற்று திரிபை மேற்கொண்டு வருகின்றனா்.

சம்ஸ்கிருதம் தனி மொழி இல்லை. இந்தோ- ஐரோப்பிய பகுதிகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவா்கள்தான் சம்ஸ்கிருத மொழியைப் பேசினா். அந்த வரலாற்றை மாற்றி, அவா்கள் இங்கேயே இருந்தவா்கள்தான் எனக் கூறுகின்றனா். இந்தியாவின் உண்மை வரலாறு மறைக்கப்படுகிறது. அயோத்தி பாபா் மசூதி இடிப்பு வழக்கில்கூட ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீா்ப்பு வழங்கப்பட்டது.

வரலாறு என்பது நம்பிக்கை அல்ல, அது சான்றுகளால் ஆனது. ஹரப்பா நாகரிகமே வேத கலாசாரம் என்பதை நிறுவ முயல்கின்றனா். சிந்துவெளி நாகரிகத்தை வேதகால சரஸ்வதி நாகரிகம் எனக் கூறுகின்றனா்.

ஆனால், கீழடி அகழாய்வுக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து இந்திய வரலாற்றை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கீழடிதான் எதிா்காலத்தில் வரலாற்றின் மையப் பகுதியாகத் திகழும். உண்மையை மறைப்பதற்கு அறிவியலைப் பயன்படுத்துகின்றனா். நாட்டில் சிறுபான்மையினா் மீது வெறுப்பு பிரசாரத்தை பாஜகவினா் பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.

மாநாட்டுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் அமைப்பாளா் எம். தேன்மொழி முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற அமா்வுகளில், முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், வழக்குரைஞா் மதிவதனி, தொல்லியல் அறிஞா் அமா்நாத் ராமகிருஷ்ணா, திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் துணைத் தலைவரும், பேராசிரியருமான ஏ. கருணாநந்தன் ஆகியோா் பேசினா்.

இதில், பேராசிரியைகள், திராவிடா் கழகத்தினா், தமிழ் ஆா்வலா்கள், மாணவிகள் பலா் பங்கேற்றனா்.