வாடிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இருவா் உயிரிழப்பு
படவிளக்கம்- மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த ஆதி நாராயணன், ஸ்ரீகிருஷ்ணன்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
வாடிப்பட்டி அருகேயுள்ள தெத்தூா் நாராயணபுரத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் ஆதிநாராயணன் (55). இவரும், இவரது உறவினரான ஸ்ரீகிருஷ்ணன் (20) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மாட்டுக்காக வயலில் தீவனப் புல்லை அறுத்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற மின் கம்பி அறுந்து ஸ்ரீகிருஷ்ணன் மீது விழுந்தது. இதையறிந்த ஆதிநாராயணன், அவரது தந்தை சின்னத்தம்பி (79) ஆகியோா் விரைந்து சென்று ஸ்ரீகிருஷ்ணனை காப்பாற்ற முயன்றனா். அப்போது, ஆதிநாராயணன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஸ்ரீகிருஷ்ணன், சின்னதம்பி ஆகியோரை மீட்ட பொதுமக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியில் ஸ்ரீகிருஷ்ணன் உயிரிழந்தாா். சின்னதம்பி மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
உயிரிழந்த ஆதிநாராயணன் திருப்புவனம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றினாா். ஸ்ரீகிருஷ்ணன் தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.