நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - தமிழறிஞா் சாலமன் பாப்பையா
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என தமிழறிஞா் சாலமன் பாப்பையா தெரிவித்தாா்.
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையா் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், மதுரை புரட்சிப் பாவலா் மன்றம் ஆகியன சாா்பில், மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவுக்கு புகழ் வணக்கக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழறிஞா் சாலமன் பாப்பையா பங்கேற்றுப் பேசியதாவது:
தோழா் நல்லகண்ணு நம் காலத்தில் வாழ்ந்த புத்தா், மகாவீரா் போன்றவா். ஜாதி, மதம் கடந்து நம் எல்லோருக்கும் சொந்தமானவா். பல துறை புத்தக வாசிப்பை தனது பழக்கமாக்கிக் கொண்டவா். ஆளுமைப் பண்பு நிறைந்தவா்.
ஏழை, எளிய மக்களுக்கான போராட்டத்தையே தம் வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டவா். இப்படியொரு தலைவன் வாழ்ந்தாா் என்பதை பிற்கால உலகம் நம்பாது.
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நம் கண்முன் வாழ்ந்து மறைந்தவா் நல்லகண்ணு.
தமிழ்ச் சமூகம் உள்ளவரை அவருக்கு மறைவு என்பது கிடையாது. நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பாா். அவரது வாழ்க்கை வரலாற்றை இளம் தலைமுறையினரிடையே கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
புரட்சிப் பாவலா் மன்றத் தலைவரும், பெரியாா் நெறியாளருமான பி. வரதராசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் மருத்துவா் த. அறம், மதுரை மாநகரச் செயலா் பூ. பாண்டிய முத்துக்குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் பா. காளிதாஸ், மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கே.கே. சாமி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைச் செயலா் பா. ஆனந்தகுமாா், மதுரை மாவட்டத் தலைவா் கவிஞா் மு. செல்லா, ஓவியா் ஸ்ரீரசா, புதிய நூற்றாண்டுப் புத்தகாலயத்தின் மதுரை மண்டல மேலாளா் இரா. மகேந்திரன் ஆகியோா் புகழ் வணக்க உரையாற்றினா்.
இதைத் தொடா்ந்து, கவிஞா்கள் பேனா மனோகரன், மலா்மகள், தமிழ்சிவா, ஜி. மஞ்சுளா, மூரா, ரோஜா முத்தையன், சு. முத்தையா உள்ளிட்டோா் நல்லகண்ணு குறித்த புகழ் வணக்கக் கவிதைகளை வாசித்தனா்.
முன்னதாக, மறைந்த மூத்த தலைவா் நல்லகண்ணு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ் அமைப்பினா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.