ராமநாதபுரத்தில் கைத்தறிக் கண்காட்சி விற்பனை: நிகழாண்டு ரூ.70 லட்சம் விற்பனை இலக்கு: அமைச்சர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் கைத்தறிக் கண்காட்சியில் விற்பனை இலக்காக
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் கைத்தறிக் கண்காட்சியில் விற்பனை இலக்காக ரூ. 70 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மு. மணிகண்டன் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஜவுளி துறை அமைச்சகமும், தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் இணைந்து, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காதர் திருமண மண்டபத்தில் கைத்தறி கண்காட்சியை திங்கள்கிழமை முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை நடத்துகின்றன. இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பாண்டி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் வி.கி. ஆனந்தகுமார், பரமக்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க இயக்குநர் வி.ஜி. அய்யான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறிக் கண்காட்சியை அமைச்சர் தொடக்கி வைத்து பார்வையிட்டு பேசியதாவது: ராமநாதபுரத்தில் 5 ஆவது முறையாக மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கங்களைச் சேர்ந்தோர் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்.
இதில், கைத்தறி நெசவாளர்களின் தயாரிப்புகளான பெட்ஷீட்டுகள், பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள் உள்ளிட்ட ரகங்கள் இடம்பெற்றுள்ளன.
இக் கண்காட்சியில் ஜவுளி ரகங்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஜவுளி வாங்கும் அனைவருக்கும் 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு, ராமநாதபுரத்தில் நடந்த கைத்தறிக் கண்காட்சியில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. இந்தாண்டு ரூ. 70 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.