விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வைகை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்ட விவசாயப் பணிகளுக்கு வைகை அணையிலிருந்து நீர் திறக்கவேண்டும் என, வைகை
ராமநாதபுரம் மாவட்ட விவசாயப் பணிகளுக்கு வைகை அணையிலிருந்து நீர் திறக்கவேண்டும் என, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலர் மு. மதுரைவீரன் தனது கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைசார்ந்து பாசனநீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விளைநிலங்கள் 67,837 ஏக்கர் உள்ளன. இதற்கான பாசன நீர் 207 கண்மாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பருவமழை பெய்து விளைநிலங்களும், கண்மாய் பகுதிகளும் ஆங்காங்கே தண்ணீரும், ஈரப்பதமுமாக உள்ளன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் பாசனநீர் திறக்கப்பட வேண்டும். வைகை அணைப் பகுதியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இம்மாவட்டத்துக்கான பாசனநீர் திறந்து விடப்பட்டால், அனைத்து கண்மாய்களும் நிரம்பி, நெல், மிளகாய் உள்ளிட்ட விவசாயப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள முடியும்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேவையான பாசனநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.