மணல் குவாரிகளை காக்கவே வைகையில் தண்ணீர் திறக்கப்படவில்லை என புகார்
மணல் குவாரிகளை பாதுகாக்கவே, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை ஆற்றில் பாசனநீர் திறந்துவிடப்படவில்லை என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மணல் குவாரிகளை பாதுகாக்கவே, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை ஆற்றில் பாசனநீர் திறந்துவிடப்படவில்லை என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நகர் செயலர் என்.எஸ். பெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு, திமுக நகர் செயலர் சேது. கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பார்த்திபனூர் அருகே உள்ள சூடியூர் அரசு மணல் குவாரியை பாதுகாக்கவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை ஆற்றில் பாசன நீர் திறந்துவிடவில்லை. இதனைக் கண்டித்து செப்டம்பர் 19-ஆம் தேதி பரமக்குடி காந்தி சிலை முன்பிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மதிமுக பழ.சரவணன், தமாகா நகர் செயலர் டி.ஆர். கோதண்டராமன், பாஜக சுந்தர், வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலர் மு. மதுரைவீரன், மமக குயின்இப்ராஹிம், ஜனதாதளம் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் கலந்துகொண்டனர்.