ராமநாதபுரம்

குப்பைகளை அகற்ற திணறும் ராமநாதபுரம் நகராட்சி!

போதிய சுகாதாரப் பணியாளர்களும், வாகனங்களும் இல்லாமல், குப்பைகளை உரமாக்கும்

ஜெயப்பாண்டி

போதிய சுகாதாரப் பணியாளர்களும், வாகனங்களும் இல்லாமல், குப்பைகளை உரமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
ராமநாதபுரம் நகராட்சிக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் சிறப்பு நிலை அந்தஸ்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த அந்தஸ்து வழங்கியபோதும், நகராட்சிக்குரிய சுகாதாரத் திட்டங்களும், அதற்கேற்ற சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை.
நகராட்சியில் சுகாதார அலுவலரின் கீழ் 4 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். ஆய்வாளர்களுக்கு கீழ் 8 சுகாதார மேற்பார்வையாளர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். நகராட்சியில் 262 சுகாதாரப் பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 94 பேர் மட்டுமே உள்ளனர். மேலும் 168 பேர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டிய நிலையில், 82 ஒப்பந்தப் பணியாளர்களை மட்டுமே நியமித்து உள்ளனர்.
 நகராட்சி விதியின்படி 250 வீடுகள் கொண்ட தெருவுக்கு 3 பேர் கொண்ட துப்புரவுப் பணியாளர்கள் குழு நியமிக்க வேண்டும். சாக்கடையை பராமரிப்பது, குப்பையைத் தரம் பிரித்து சேகரிப்பது, தெருக்களைப் பெருக்கி சுகாதாரமான முறையில் பராமரிப்பது ஆகியவற்றை மூவரும் மேற்கொள்ள வேண்டும்.
 நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் சாக்கடை பராமரிப்பு தேவையில்லை. ஆகவே 3 பேர் கொண்ட சுகாதாரப் பணியாளர் குழுவினர் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்தும், தெருக்களில் குப்பைகள்  சேராமல் பெருக்கியும் செயல்பட்டால் போதுமானது.
 அதனடிப்படையில் 50 ஆயிரத்துக்கும் மேலாக மக்கள் தொகை கொண்ட நகரில் 200 துப்புரவுப் பணியாளர்கள் இருப்பது அவசியம் என்ற நிலையில் தற்போது 176 பேர் மட்டுமே உள்ளனர். நகரில் தற்போது உள்ள 176 பேரில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் 20 பேரும், புதிய பேருந்து நிலையப் பராமரிப்பில் 6 பேரும், குப்பைகளை தரம் பிரித்து அதில் உரம் தயாரிக்கும் கூடங்களுக்கு அனுப்ப 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரில் உள்ள 12 சமுதாயக் கழிப்பறைகளை பராமரிக்க 6 பேர் என மொத்தம் 42 பேர் குறிப்பிட்ட பணிகளுக்கே செல்கின்றனர். ஆகவே வழக்கமான துப்புரவுப் பணிகளுக்கு 66 பேர் இன்னும் கூடுதலாகத் தேவைப்படுகிறார்கள். 
சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை ஒருபுறமிருக்க, குப்பைகளை சேகரிக்க கடந்த பிப்ரவரியில் நகராட்சிக்கு 41 பேட்டரி கார், 7 சிறிய லாரிகள் என மொத்தம் 48 வாகனங்கள் தரப்பட்டும், அவை இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. மேலும் அவற்றிக்கு ஓட்டுநர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 
    குப்பைகளைத் தரம் பிரித்து சேகரித்து அவற்றை நுண்ணுயிரி உரமாக்க 4 மையங்கள் அமைக்கும் திட்டமும் முடியவில்லை. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே பேட்டரி கார்கள் நகராட்சிக்கு கிடைக்கும் நிலையுள்ளது. ஆனால் இத்திட்டத்துக்கு பாத்திமா நகர் உள்ளிட்ட 2 இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இத்திட்டமும் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியே.  பணியாளர்கள் மற்றும் வாகனப் பற்றாக்குறை இருக்கும் நிலையில் பணிக்கு வருவோரும் உரிய நேரத்தில் வருவதில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.
  இந்த நிலையில்தான் நகராட்சி சார்பில் 5 இடங்களில் சாணத்தை தெளித்து மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 45 நாள்களில் 10 டன் குப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றை கிலோ ரூ.1 என்ற விலையில் விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆள்பற்றாக்குறை, வாகனப் பற்றாக்குறை இருப்பதால், குப்பைகளை அகற்றுவதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வேறு வழியின்றி அந்தந்த பகுதியில் தொட்டி அமைத்து உரம் தயாரிக்கும் நிலைக்கு  நகராட்சி தள்ளப்பட்டுள்ளது.    அதே நேரத்தில் சிறப்பு நிலை அந்தஸ்து கிடைத்ததால் நகரில் குடிநீர் வரி முதல் குப்பை வரி வரை புதிய வரிகள் கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது. ஒரு புறம் சிறப்பு நிலை எனக் கூறி அதிக வரியை வசூலிக்கும் நிலையில், அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்பதை அரசு கவனத்தில் கொள்ளாதது ஏன் என்பதே மக்கள் ஆதங்கம்.
 இப்பிரச்னை குறித்து நகர்நல அலுவலர் சி.  ஸ்டாலின் குமார் கூறியது: நகராட்சியில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்த்திட 77 ஒப்பந்தப்பணியாளர்களை நியமிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. குப்பைகளை தரம் பிரித்து அதை உரமாக்கும் திட்டத்தை  செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT