ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் 60 அடி சாலைகள் 20 அடியாக சுருங்கியது

ராமநாதபுரத்தில் 60 அடியில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்துச் சாலைகளும் ஆக்கிரமிப்பால்

ஜெயப்பாண்டி

ராமநாதபுரத்தில் 60 அடியில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்துச் சாலைகளும் ஆக்கிரமிப்பால் 20 அடியாக குறுகியுள்ளதால்,  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சியின் மொத்தப் பரப்பு 6.33 சதுர கிலோ மீட்டர். இங்கு 235 தெருக்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் வண்டிக்காரத்தெரு, சாலைத் தெரு, சுவாமி விவேகானந்தர் தெரு, அரண்மனைத் தெரு ஆகிய பகுதிகளில் 4 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலையாகவும், மதுரை-மண்டபம் சாலை, தேவிபட்டினம் சாலை என 5 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளன.
நகரின் பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிப்பாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் சாலைகள் குளம் போலவும், வெயில் காலத்தில் புழுதி பறக்கும் நிலைக்கும் மாறி விடுகின்றன.  நகரச் சாலைகள் மாநில, நகராட்சி நிர்வாக பராமரிப்பில்  அமைந்திருப்பதால் அவற்றை எந்த துறையினரும் முழுமையாக  பராமரிப்பதில்லை. 
குறிப்பாக 1.2 கிலோ மீட்டர் அளவுள்ள ராஜ வீதியானது, அரண்மனை முதல் கேணிக்கரை வரை மாநில நெடுஞ்சாலையாகவும், கேணிக்கரை முதல் ஓம்சக்தி நகர் வரை நகராட்சி சாலையாகவும் உள்ளது. மேலும் ஓம்சக்தி நகர் முதல் பட்டணம்காத்தான் வரை ஊராட்சி சாலையாக உள்ளது.    
அதேபோல 800 மீட்டர் அளவுள்ள சாலைத் தெருவானது,  அக்ரஹாரம் வரை (400 மீட்டர்) நகராட்சி பராமரிப்பிலும், மீதமுள்ள நயினார்கோவில் செல்லும் வழி மாநில நெடுஞ்சாலையாகவும் பராமரிக்கப்படுகிறது. வெவ்வேறு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அச்சாலைகளில் நிகழும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு  நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் இணைந்து செயல்படுவதும் இல்லை. இதனால் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.நெடுஞ்சாலைகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை பராமரிக்க வேண்டும் என்றாலும், கடந்த 8 ஆண்டுகளாக எந்தச்சாலையும் முறையாக பராமரிக்கப்படவில்லை.  ஒரு புறம் ஆக்கிரமிப்பு, மறுபுறம் பராமரிப்பின்மையால் பெரும்பாலான சாலைகள் குறுகி வாகனம் செல்ல முடியாத சிறு தெருக்களாக மாறியுள்ளன. 
 இதுகுறித்து நகராட்சி பொறியாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியது: நகரச் சாலைகள் பராமரிப்பை முழுமையாக நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது அவசியம். தேசிய அளவில் ராமநாதபுரம் மாவட்டம் வளர்ந்து வரும் முன்னோடி மாவட்டமாக தேர்வாகியிருப்பதால் சாலை மேம்பாடு உள்ளிட்ட  ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளன என்றனர்.


நான்கு வழிச்சாலையும் இருவழிச் சாலையாகிறதா?
ராமநாதபுரத்தில் முக்கிய சாலையாக மதுரை-ராமேசுவரம் சாலை உள்ளது. இந்த சாலை அச்சுந்தன்வயல் முதல் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 8 கிலோ மீட்டர் தூரமுள்ளது.  அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலக வளாகம் வழியாகச் செல்லும் இச்சாலை 60 அடி அகலமுடையது. ஆனால், தற்போது அரசு மருத்துவமனை, பேருந்து நிலைய பகுதிகளில் பெரும்பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சாலை 20 அடியாகவுள்ளது. இந்நிலையில், அந்தச் சாலை ரூ.35 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. அதன்படி சாலையின் இருபுறமும் நடைபாதைகள், மழைநீர் வடிகால் வசதிகள் அமைய வேண்டும். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை சீரமைக்க திட்டமிடுவதால், சாலை முழுமையாக அமையுமா, நிதி முழுமையாக பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT