முகப்பு
ராமநாதபுரம்

அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராமமே காலி : கோயில் திருவிழாவுக்காக ஆண்டுக்கு ஒருமுறை கூடும் வினோதம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மேலசாக்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:06 AM
பகிர்:


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மேலசாக்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய மக்கள்,  கோயில் திருவிழாவுக்காக மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை ஜூன் மாதம் கிராமத்திற்குத் திரும்புகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் 20 ஆண்டிற்கு முன் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இக்கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 வீடுகளில் கூட நிரந்தரமாக தங்கும் மக்கள் இல்லை.  இக்கிராமத்தில் குடியிருந்தவர்கள் பெரும்பாலும்  பல்வேறு அரசு துறைகளில் அரசு பணியில் பணியாற்றி வருகின்றனர்.
நாளடைவில் அடிப்படை வசதிகளைத் தேடி ஒவ்வொருவரும் நகர்ப்புறங்களுக்கு சென்று விட்டனர். முதுகுளத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு செல்லப் போதுமான தார்ச்சாலையோ, பேருந்து வசதியோ இல்லை. இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடம் இருந்தும் படிக்க மாணவர்கள் இல்லை. மின்கம்பங்கள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், இக்கிராமத்திற்கு குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை.  இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் போனதால் ஊரை விட்டு மக்கள் வெளியேறியுள்ளனர். 
இந்த கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட்டு 20 ஆண்டு காலம் ஆகி விட்டது. இதனால் இதுவரை பேருந்து வசதி இல்லை. அக்கிராம மக்கள் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் முதுகுளத்தூருக்கு 5 கி.மீ. நடந்து தான் வரவேண்டும்.
 சாலை வசதி இல்லாததால் வாடகை வாகனங்கள் இவ்வூருக்கு வருவது கிடையாது. ஊரில் ஆடுமாடுகளை வைத்துக்கொண்டு முதியோர் மட்டும் தற்போது வசித்து வருகின்றனர். 
 20 ஆண்டுக்கு முன்பு முதுகுளத்தூர் பிரதான சாலையில் இருந்து இக்கிராமத்திற்கு 3 கி.மீ.தூரத்தில் மட்டும்  ரூ.57 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை குண்டும் குழியுமாக மோசமாகக் கிடக்கிறது. 2014-15 ஆம் ஆண்டில் ஊராட்சி நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில், இக்கிராமத்தில் தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கிறது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராமசபைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை. 2013-14 ஆம் ஆண்டில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் மயானக்கட்டடம் கட்டப்பட்டு தற்போது இடிந்த நிலையில் கிடக்கிறது. 
இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கருவேல மரங்கள் அடர்ந்து கிடக்கின்றன.கண்மாயைத் தூர் வாரி சுமார் 30 ஆண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இதனால் அப்பகுதியில் கண்மாயில் நீர் ஆதாரம் இல்லாமல் கால்நடைகளும், விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. கிராம மக்கள்100 நாள் வேலை பார்த்து ஒருவருடத்திற்கு மேல் ஆகிவிட்டதாக கூறுகின்றனர். 
இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறியது: கடலாடி ஊராட்சியில் இருந்து எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் ஒதுக்கப்பட்ட கிராமாக மேலசாக்குளம் ஆகிவிட்டது. சாலை மோசமாக கிடப்பதால் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை.  இதனால் பெரும்பாலானோர் ஊரை காலி செய்து முதுகுளத்துôர், கடலாடி, மதுரை, சென்னை, ராமேசுவரம், கோயமுத்தூர்,போன்ற  பகுதியில் குடியேறிவிட்டனர். 
தற்போது  கிராமத்தின் முன்பு காவல் தெய்வமாக வீற்றிக்கும் அய்யனார், கருப்பசாமி கோயில் திருவிழாவுக்காக ஜூன் 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூன் 21 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும். இதனால் வெளி ஊர்களில் வசித்து வந்தவர்கள்  ஆண்டிற்கு ஒரு முறை  குடும்பத்துடன் கிராமத்தில் தங்கி விரதம் இருந்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது காப்பு கட்ட உள்ளதால் திருவிழா முடியும் வரை தங்களுக்கு தேவையான வசதிகளை தாங்களே 
ஏற்படுத்திக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர் என்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →