ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் நிதீஷ் மகன் நிஷாந்த்!
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரின் அரசியல் நுழைவு குறித்து...
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், பாட்னாவில் உள்ள ஜேடியு தலைமை அலுவலகத்தில் இன்று(மார்ச் 8) முறைப்படி இணைந்து, கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார்.
பாட்னாவில் உள்ள ஜேடியு தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள், அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நிஷாந்த் குமாா் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் பிகார் முதல்வரும் நிஷாந்தின் தந்தையான நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை.
பிகார் முதல்வராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும் நிதீஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த மாா்ச் 5-இல் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
இதன்மூலம் தனது முதல்வர் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், விரைவில் பதவி விலக உள்ளார். நிதீஷ் விலகலுக்குப் பின் பாஜக முதல்வர் தலைமையில் பிகாரில் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஷாந்தின் அரசியல் பிரவேசம், ஜேடியு தலைமையின் தலைமுறை மாற்றத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஆனால், நிதீஷ் குமாரின் முடிவால் அதிருப்தியில் இருந்த அவரது கட்சியினருக்கு நிஷாந்தின் அரசியல் பிரவேசம் ஆறுதல் அளித்துள்ளது.
ஜேடியுவில் இணைந்த பிறகு கட்சித் தொண்டர்களிடம் பேசிய நிஷாந்த், தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக தலைமைக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
“அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் என் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வேன். கடந்த 20 ஆண்டுகளில் என் தந்தை செய்ததை நினைத்து நானும் பிகார் மக்களும் பெருமைப்படுகிறோம்” என்று நிஷாந்த் கூறினார்.
யார் இந்த நிஷாந்த் குமார்?
நிதீஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமாா் (50) பி.டெக். பட்டதாரி. மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றியுள்ள அவர், அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.
கடந்த ஓரிரு ஆண்டுகளில் பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்றார். பிகாா் அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பின்னணியில் இருந்து அவர் உதவியதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில், அவர் நேரடியாக தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார்.
Nishant Kumar, son of Janata Dal (United) president and Bihar Chief Minister Nitish Kumar, formally joined the JDU headquarters in Patna today (March 8) and received his membership card.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.