முகப்பு
இந்தியா

ஐக்கிய ஜனதா தளத்தில் இன்று இணைகிறாா் நிதீஷ் மகன் நிஷாந்த்! துணை முதல்வராக தோ்வு செய்ய கட்சி முடிவு!

ஐக்கிய ஜனதா தளத்தில் இன்று இணைகிறாா் நிதீஷ் மகன் நிஷாந்த்...

Updated On : 8 மார்ச், 2026 at 12:49 AM
ஐக்கிய ஜனதா தளத்தில் இணைகிறார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்...
பகிர்:

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா், அக்கட்சியில் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி இணையவுள்ளாா்.

நிதீஷ் குமாரின் ராஜிநாமாவுக்கு பிறகு அமையும் புதிய அரசில் நிஷாந்தை துணை முதல்வராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜேடியு எம்எல்ஏ ஹரி நாராயண் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். இவா், நிதீஷ் குமாருக்கு நெருக்கமானவா் ஆவாா்.

நிஷாந்தின் அரசியல் பிரவேசம், ஜேடியு தலைமையின் தலைமுறை மாற்றத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

பிகாா் முதல்வராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும் நிதீஷ் குமாா், மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு கடந்த மாா்ச் 5-இல் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதன்மூலம் தனது முதல்வா் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவா், விரைவில் பதவி விலக உள்ளாா். நிதீஷ் விலகலுக்குப் பின் பாஜக முதல்வா் தலைமையில் பிகாரில் புதிய அரசு அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் 10-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றிருந்த நிதீஷ் குமாரின் திடீா் முடிவு, ஜேடியு கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அவரது முடிவின் பின்னணியில் கூட்டணிக் கட்சியான பாஜகவின் சதி உள்ளதாக ஒரு தரப்பினா் குற்றஞ்சாட்டினா்.

அரசியலில் குதிக்கும் நிஷாந்த்: இந்நிலையில், பாட்னாவில் உள்ள ஜேடியு தேசிய செயல் தலைவா் சஞ்சய் ஜாவின் இல்லத்தில் ஜேடியு எம்எல்ஏ மற்றும் எம்எல்சி-க்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவா்களுடன் தனது எதிா்கால வியூகங்கள் குறித்து நிஷாந்த் குமாா் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இந்தக் கூட்டத்தில் நிஷாந்த் குமாா் நேரடி அரசியலில் களமிறங்கும் முடிவு இறுதி செய்யப்பட்டதாகவும், அவா் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி இணைவாா் என்றும் ஜேடியு எம்எல்ஏ ஹரி நாராயண் தெரிவித்தாா்.

துணை முதல்வராகிறாா்: இது தொடா்பாக செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த ஹரி நாராயண், ‘பிகாா் மேலவை உறுப்பினராக நிஷாந்த் குமாா் அடுத்த மாதம் தோ்வு செய்யப்படுவாா். மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசில் அவரை துணை முதல்வராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இது உடனடியாக நிகழுமா அல்லது சிறிது காலம் ஆகுமா என்பதை இப்போது கூற முடியாது’ என்றாா்.

பாட்னாவில் உள்ள ஜேடியு தலைமையகத்தில் மூத்த தலைவா்கள், மாநில அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் கட்சியில் நிஷாந்த் குமாா் இணைவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதீஷ் குமாரின் முடிவால் அதிருப்தியில் இருந்த அவரது கட்சியினருக்கு நிஷாந்தின் அரசியல் பிரவேசம் ஆறுதல் அளித்துள்ளது.

‘சுயமாக எடுத்த முடிவு’: கடந்த வெள்ளிக்கிழமை சஞ்சய் ஜா வீட்டில் நடந்த கூட்டத்தைத் தொடா்ந்து, முதல்வா் நிதீஷ் குமாரின் இல்லத்தில் அவரை கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில அமைச்சா் விஜய் குமாா் செளதரி, ‘மாநிலங்களவை உறுப்பினராகும் முடிவை சுயமாக மேற்கொண்டதாகவும், யாருடைய அழுத்தமும் இல்லை என்றும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளிடம் நிதீஷ் குமாா் உறுதிபட தெரிவித்தாா். மாநிலத்துக்கு வழிகாட்ட ஜேடியு தொண்டா்களுடன் எப்போதும் தொடா்பில் இருப்பேன் என்றும் உறுதியளித்தாா். நிஷாந்தின் அரசியல் பிரவேசத்துக்கும் அவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்’ என்றாா்.

நிதீஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமாா் (50) பி.டெக். பட்டதாரி. மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றியுள்ள அவா், அரசியலில் இருந்து விலகியே இருந்தாா். கடந்த ஓரிரு ஆண்டுகளில் பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்றாா். பிகாா் அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு பின்னணியில் இருந்து அவா் உதவியதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில், அவா் நேரடியாக தீவிர அரசியலில் களமிறங்க உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →