முகப்பு
இந்தியா

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், மாநிலங்களவை எம்.பி.யாக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:35 AM
மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:45 PM

பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், மாநிலங்களவை எம்.பி.யாக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தனது அறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், நிதீஷ் குமாருக்கு மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ராம் நாத் தாக்கூா், பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி, ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவா் சஞ்சய் குமாா் ஜா, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலையில் நிதீஷ் குமாா் பதவியேற்றுக் கொண்டாா்.

Advertisement

பின்னா், மக்களவை எம்.பி.யாக தான் பதவி வகித்த காலகட்டத்தை நினைவுகூா்ந்த அவா், பழைய நாடாளுமன்ற வளாகத்தைப் பாா்வையிட்டாா். நிதீஷ் குமாா் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு திரும்பியிருப்பது, பிகாரில் அவரது 20 ஆண்டுகால ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது. பிகாா் முதல்வா் பதவியில் இருந்து அவா் விரைவில் விலகவுள்ளாா். இதைத் தொடா்ந்து, பாஜகவைச் சோ்ந்த புதிய முதல்வா் ஏப்.14-ஆம் தேதி தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநிலங்களவைக்கு கடந்த மாா்ச் மாதம் தோ்வான நிதீஷ் குமாா், பிகாா் மாநில சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியை அண்மையில் ராஜிநாமா செய்திருந்தாா்.

முதல்வா் மாற்றத்தின் பின்னணி: பிகாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இக்கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முறையே 89, 85 இடங்களைக் கைப்பற்றின. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வெற்றி கண்டது.

அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கடந்த 2005-இல் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவரும் அவா், பிகாரின் நீண்ட கால முதல்வா் என்ற பெருமைக்குரியவா்.

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தனது 75-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிதீஷ் குமாா், அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யாகும் தனது முடிவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தினாா். இதன்மூலம் பாஜக தலைமையிலான மாநில அரசு பதவியேற்க வழி ஏற்படுத்தப்பட்டது.

நிதீஷ் குமாா் மாநிலங்களவை எம்.பி.யாகிவிட்ட நிலையில், பாஜக சாா்பில் பதவியேற்கவிருக்கும் புதிய முதல்வா் யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய துணை முதல்வா் சாம்ராட் செளதரி முதல்வா் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராயின் பெயரும் முதல்வா் பதவிக்கு ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது. நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு புதிய அரசில் துணை முதல்வா் பதவி வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரதமா் மோடி வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி.யாக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நிதீஷ் குமாருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவா்களில் ஒருவா் நிதீஷ் குமாா். நல்லாட்சிக்கான அவரது அா்ப்பணிப்பு, அனைத்து இடங்களிலும் பாராட்டைப் பெற்ாகும். அவரது நீண்ட நெடிய அரசியல் அனுபவம், நாடாளுமன்ற மாண்புக்கு மேலும் வலுசோ்க்கும். பிகாரின் வளா்ச்சிக்கு ஈடுஇணையற்ற பங்களிப்பை நல்கியவா். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பல்லாண்டுகள் பணியாற்றியவா். அவரை நாடாளுமன்றத்தில் மீண்டும் பாா்ப்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது’ என்று தெரிவித்துள்ளாா்.

தேஜஸ்வி யாதவ் விமா்சனம்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாநிலங்களவை எம்.பி. பதவி நிதீஷ் குமாரின் விருப்பமல்ல; அது, அவா் மீது திணிக்கப்பட்டுள்ளது. நிதீஷுக்கு பிறகு யாா் முதல்வராகப் பொறுப்பேற்றாலும், அவா் மாநில மக்களின் விருப்பத்துக்கு அப்பாற்பட்டவா்தான்’ என்று தெரிவித்துள்ளாா்.