கட்டி முடித்து 2 ஆண்டுகளாக திறக்கப்படாததால் மதுக்கூடாரமாக மாறும் கால்நடை மருத்துவமனை: முதுகுளத்தூரில் வீணாகும் ரூ.25 லட்சம் அரசு நிதி
முதுகுளத்தூரில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக திறக்கப்படாததால் மது அருந்துவோரின் கூடாரமாக
முதுகுளத்தூரில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக திறக்கப்படாததால் மது அருந்துவோரின் கூடாரமாக கால்நடை மருத்துவமனை கட்டடம் மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காந்திநகரில் அமைந்துள்ள சிறிய கட்டத்தில் கால்நடை மருத்துவமனையை 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அப்போதைய அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார். தற்போது இந்த கட்டடம் பாழடைந்து, சுற்றிலும் முள்புதர்கள் வளர்ந்து உள்ளது. இந்த கட்டடம் இடிந்த நிலையில் இருந்ததால் 2016-2017 ஆம் நிதியாண்டில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை பொதுப்பணித்துறையினரால் கட்டப்பட்டது.
இந்த கட்டடம் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. புதிய கட்டடம் இருந்தும் இன்னும் பழைய ஓட்டு கட்டடத்தில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தற்போது பணியாளர் ஒருவர் மட்டுமே உள்ளதால் பணிச்சுமை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகம் முழுவதும் முள்புதர் அடர்ந்து உள்ளதால் விஷ பூச்சிகள் தஞ்சமடைந்து விடுவதாகவும் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் மதுப்பிரியர்களும், சமூக விரோதிகளும் இக்கட்டடத்தை தவறுதலாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. குடிதண்ணீர், மின்சாரம் வசதி,சாலை வசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.
இது குறித்து கால்நடை மருத்துவர் டி.மெய்யரசன் கூறியது: புதிய கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடம் பராமரிப்பின்றி தற்போது சேதமடைந்து விட்டது. மருத்துவமனையை சுற்றி சுவர் இல்லாததால் மது பிரியர்கள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை உடைத்துப்போட்டு விட்டு செல்கின்றனர். சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து கிடப்பதால் ஊழியர்கள் தங்கி மருத்துவம் செய்ய அச்சப்படுகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறையால் சில கிராமங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை செய்ய முடியாமல் நோயுற்ற கால்நடைகள் இறந்து விடுகின்றன என்றார்.
இதனால் இப்பகுதி கால்நடை வளர்ப்பவர்களின் நலன்கருதி கால்நடை மருத்துவமனையில் அடிப்படை வசதி ஏற்படுத்திக்கொடுத்து, புதிய கட்டடத்தை திறக்கவும், போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்தவும் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.