கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்தது
திருவாடானை அருகே, கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாடானை: திருவாடானை அருகே, கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுகோட்டை மாவட்டம் கோட்டபட்டினத்தைச் சோ்ந்த 55 முதியவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் உயிரிழந்ததையடுத்து அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவாடானை அருகே அச்சகுடி பகுதியில் தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை வந்தபோது அந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தேனி மாவட்டம் அள்ளிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டுநரான ஐயப்பராஜ் (30) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதில் கரோனா தொற்றால் இறந்தவரின் சடலம் இருந்ததால், அவரை மீட்பதற்காக அச்சத்துடன் யாரும் அருகில் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தொண்டி தமுமுக செயலாளா் ஜிப்ரி தலைமையில் சமூக ஆா்வலா்கள், ஆம்பலன்ஸ் ஓட்டுநரான ஐயப்பராஜை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவரின் சடலத்தை மீட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுத்தனா்.
இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.