ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நூற்றுக்கணக்கில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் கிராம உதவியாளர்களுக்கான 15 காலிப்பணியிடங்களுக்கு நூற்றுக்கணக்கில் பெண்கள் குவிந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் கிராம உதவியாளர்களுக்கான 15 காலிப்பணியிடங்களுக்கு நூற்றுக்கணக்கில் பெண்கள் குவிந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. அதில் ராமநாதபுரம் வட்டத்தில் மட்டும் 15 காலிப்பணியிட்களுக்கு 1400 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் நேர்காணலுக்கு தகுதியான 934 பேருக்கு மட்டும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நேர்காணல் நடத்த அறிவிப்பு வெளியானது.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த நேர்காணலுக்கு பாண்டமங்களம், பிரப்பன்வலசை, கழுகூரணி, அத்தியூத்து, தொருவழூர்-2, குயவன்குடி, என்மணங்கொண்டான் ஆகிய கிராமங்களுக்கான உதவியாளர்கள் பணிக்கு 414 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தனர். பொது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பல பிரிவுகளில் கிராம உதவியாளர்கள் பணியிடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதால், அதனடிப்படையில் சான்றிதழ்களையும் சரிபார்த்தனர்.
நேர்காணல் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சூரன்கோட்டை-2, வாலாந்தரவை, பட்டிணம்காத்தான், காவனூர், கும்பரம், ஆர்.எஸ்.மடை, அமைனேந்தல், தேர்போகி ஆகிய ஊர்களுக்கான உதவியாளர் பணிக்கு 520 பேர் வரவழைக்கப்பட்டனர். காலை 4 ஊர்கள், மாலை 4 ஊர்கள் என இரு பிரிவாக நேர்காணல் நடைபெற்றது. கல்வி, இருப்பிடம், வாகன ஓட்டுநர் உரிம் என முக்கிய சான்றுகளுடன் பெண்கள் நேர்காணலுக்கு வந்திருந்தனர். ராமநாதபுரம் வட்டத்தில் மொத்தம் 15 இடங்களுக்கான பதவிக்கு நூற்றுக்கணக்கில் பெண்கள் வந்ததால் பந்தல் போடப்பட்டு அமரவைக்கப்பட்டு நேர்காணல் நடந்தது.
இப்பணியிடங்கள் பெரும்பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் கூறினர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேர்காணலுக்கு வந்த கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நேர்காணலுக்கு வந்த அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசு விதிமுறைப்படி நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் வட்டாட்சியர் குருவேல் தெரிவித்தார்.