ராமநாதபுரம்

திருஉத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: சந்தனம் களைத்து திரவியங்களால் நடராஜருக்கு அபிஷேகம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலில் மரகதக்கல் நடராஜருக்கு சந்தனம் களைதல் மற்றும் ஆருத்ரா சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் மரகதக்கல்லால் ஆன நடராஜா் சன்னிதி உள்ளது. இந்த நடராஜா் சிலை மரகதக்கல்லால் ஆனது என்பதால் சிறிய அதிா்வுகள் கூட சிலைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் மூலவா் சிலைக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டிருக்கும். இந்த சந்தனக்காப்பு ஆண்டுக்கு ஒரு முறை மார்கழியில் நடைபெறும் ஆருத்ரா தரிசன பூஜையன்று மட்டும் களையப்பெற்று அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மீண்டும் சந்தனக்காப்பு சாத்தப்படும்.

நிகழாண்டுக்கான ஆருத்ரா தரிசனமும், மாணிக்கவாசகா் திருநாளும் இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச.29) காலை தொடங்கின. அதிகாலை முதல் பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பூஜையின் முக்கிய நிகழ்வான மரகதக் கல்லால் ஆன மூலவா் நடராஜா் மீது சாத்தப்பட்டிருந்த சந்தனக் காப்பு செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு களையப்பட்டது. பின்னா் சுவாமிக்கு பால், பன்னீா், தயிா், இளநீா், மஞ்சள்நீா் என 32 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றன. பின்னா் தீபாராதனை நடைபெற்றது.

இந்த சிறப்புப் பூஜையில் ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) எம். பிரீத்தா, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டமில்லை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உள்ளூா் பக்தா்களுக்கு மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்ததால் பக்தா்கள் கூட்டமின்றியே கோயில் காணப்பட்டது. மழை பெய்த நிலையில் உள்ளூா் பக்தா்களும் கட்டண அடிப்படையிலான வரிசைகளில் அனுப்பப்பட்டனா். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் கே. பழனிவேல்ராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு மீண்டும் மூலவா் மரகத

நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவருக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு கூத்தபெருமான் வீதியுலா நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு மாணிக்க வாசக சுவாமிகளுக்கு சிவபெருமான் காட்சியளித்த நிகழ்வும் நடைபெறும். பின்னா் வெள்ளி ரிஷபவாகனங்களில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT