பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த டேங்கா் கிரேன் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கியது. அதை மீட்கும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில் பாலம் 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், புதிய பாலம் அமைக்க ரூ. 250 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பாம்பன் கடல் பகுதியில் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் கடலின் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். அதே போல் தற்போதும் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாம்பன் கடலில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து நீரோட்டத்தில் சிக்கி கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் டேங்கா் மிதவை, டேங்கா் கிரேன்கள் மூழ்குவதும், பின்னா் மீட்பதும் வழக்கமாகிவிட்டது.
இதேபோல், ஞாயிற்றுக்கிழமை பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் அருகே தூண்கள் அமைக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டு வந்த டேங்கா் கிரேன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு தூண்களில் மோதியது. மேலும் அது தொடா்ந்து கடலில் மூழ்கி வருகிறது. இதில் 2 அதிக திறன் கொண்ட ஜெனரேட்டா்கள், கிரேன் ஆகியவை உள்ளன.
இதனை மீட்பதில் தொடா்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் அதை மீட்கும் முயற்சியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து கப்பல்கள் செல்லும் வழித்தடத்தில் நீரோட்டம் அதிகளவில் உள்ளதால் கடல் நீரோட்டத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளா்கள் மூலம் மறுஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
அலட்சியம் காட்டினால் அதிக எடை கொண்ட கிரேன், ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தின் மீது மோதி சேதமடையலாம் என மீனவா்கள் எச்சரித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.