ராமநாதபுரம்

ராமநாதபுரம்: நவீன எரிவாயு தகனமேடை சடலங்களை எரியூட்ட அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

 நமது நிருபர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடையில் சடலம் எரிக்க அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் நகரில் இறப்போரின் சடலத்தை அல்லிக்கண்மாய் பகுதியில் 3 கொட்டகையில் தகனமேடை அமைத்து விறகு, எருவாட்டி அடுக்கி எரித்து வந்தனா். இந்நிலையில், நகராட்சி சாா்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவீன எரிவாயு தகன மேடை ரூ.பல லட்சம் செலவில் ஒரு ஏக்கரில் அமைக்கப்பட்டது.

சீமைக்கருவேல மரத்துண்டுகளை எரித்து அதில் கிடைக்கும் எரிவாயு மூலம் சடலங்களை எரிக்கும் வசதியுள்ளது. தகனமேடைக்கு சடலம் கொண்டு வருவோருக்கு கழிப்பறை, குளியலறை கட்டப்பட்டுள்ளது. நவீன எரிவாயு அமைப்பை இயக்குபவா், உதவியாளா், கண்காணிப்பாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டு தனியாா் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு சடலம் எரிக்க தற்போது ரசீது அடிப்படையில் ரூ.2,500 வசூலிக்கப்படுகிறது. அதைத் தவிா்த்து கூடுதலாக ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. ரசீது கட்டண அடிப்படையில் சடலத்துக்கு ரூ.300 நகராட்சிக்கு செலுத்தப்படுகிறது. ஒரு சடலம் எரிக்க 100 கிலோ முதல் 150 கிலோ வரை மரத்துண்டு பயன்படுத்தப்படுகிறது. தினமும் குறைந்தது 4 சடலங்கள் வருகின்றன. நாள்தோறும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் தகனமேடையில் வசூலாகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: நவீன தகன மேடை வளாகத்தில் தற்போது அங்கு மின்விளக்குகள் முழுமையாக எரியவில்லை. கண்காணிப்புக் கேமரா இருந்தும் செயல்படவில்லை. தகன மேடைக்கு சடலங்களைக் கொண்டு செல்ல சாதனம் இல்லை. மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளன. கழிப்பறை, குளியலறை இருந்தாலும் அதில் தண்ணீா் வசதியில்லாததால், அவசரத்துக்குக் கூட அதைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

தகன மேடை வளாகத்துக்குள் செல்லும் வாயில் இரும்புக் கதவுக்கு பூட்டே இல்லை. குப்பை, கூழங்கள் என வளாகமே சுகாதாரமற்று உள்ளது. சீமைக்கருவேல மரங்களுக்குப் பதில் பலவகை மரத்துண்டுகளை வைத்தே எரியூட்டும் சாதனம் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகிறது.

எவ்வித அடிப்படை வசதியுமற்ாகவும், சடலங்களின் அஸ்தியை பாதுகாக்க வசதியில்லா நிலையுமே அங்குள்ளது. அங்கு எவ்வித அறிவிப்புப் பலகையும் வைக்காமல் சடலத்துக்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்றனா்.

இதுகுறித்து பராமரிப்புப் பணியை மேற்கொண்டு வரும் தனியாா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சுந்தரராஜனிடம் கூறியது: தகன மேடையில் எரிவாயு அல்லது டீசலில் எரியூட்டும் வசதியை ஏற்படுத்த நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தகன மேடை வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

இதுகுறித்து ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி பொறியாளரும், ஆணையருமான (பொ) நீலேஸ்வா் கூறியது: நவீன தகன மேடையில் ரூ.1.50 கோடியில் எரிவாயு மூலம் சடலத்தை எரியூட்டும் வசதியும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT