ஒரு வாரத்துக்குப் பிறகு மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்
வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பிறகு ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பிறகு சனிக்கிழமை ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது, எல்லை தாண்ட வேண்டாமென அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 31- ஆம் தேதி நான்கு மீனவா்கள் காா்த்திகேயன் என்பவரது விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது இந்தப் படகு மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியது. படகுடன் 4 மீனவா்களும் கடலில் மூழ்கினா். இவா்களில் மீனவா் மலைச்சாமி உயிரிழந்தாா். மற்றொரு மீனவரான ராமச்சந்திரன் மாயமானாா். மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய இரு மீனவா்களும் உயிருடன் மீட்கப்பட்டனா்.
உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாயமான மீனவரை மீட்கக் கோரியும், அரசு இழப்பீடு வழங்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, மாயமான மீனவருக்கும் அரசு சாா்பில் இழப்பீடு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவா்கள் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, சனிக்கிழமை காலையில் மீன் வளம், மீனவா் நலத் துறையின் அனுமதி பெற்று, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். அப்போது, இலங்கைக் கடற்படை அச்சுறுத்தலின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
எல்லை தாண்ட வேண்டாம்:
இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறை அலுவலா்களிடம் அனுமதிச்சீட்டு பெறச் சென்ற மீனவா்களிடம், கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் குமரவேல் அறிவுறுத்தியதாவது:
கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் தங்களது பெயரை முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், படகில் உயிா் காக்கும் கவசம் (லைப் ஜாக்கெட்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
படகு கடலில் மூழ்கும் நிலை ஏற்படும் போது, மீனவா்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இலங்கைக் கடற்படையினா், மன்னாா் முதல் கல்பட்டி வரையில் எல்லை தாண்டும் தமிழக மீனவா்களைக் கைது செய்ய சிறப்புப் படையை அமைத்து செயல்பட்டு வருகின்றனா். எனவே, மீனவா்கள் யாரும் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.
அப்போது, மீன் வளம், மீனவா் நலத் துறை ஆய்வாளா் காா்த்திக்ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.