ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,171 மெட்ரிக் டன் உரம் இருப்பு
8,171 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ் ஆண்டு விவசாயப் பணிக்கு 8,171 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கண்ணையா தெரிவித்தாா்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஜனவரி மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை இயல்பாக கிடைக்கும் 827 மி.மீ. மழை அளவில் இது வரை 271 மி.மீ. மழை கிடைத்துள்ளது. விவசாயிகள் இந்த மழையைப் பயன்படுத்தி முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து, மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், மானியத்தில் வழங்கப்படும் பசுந்தாள் உர தக்கைப் பூண்டு விதைகளை விதைத்து, அதை 45-ஆவது நாளில் மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் 25 சதவீத தழைச்சத்து உரத் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
அசோஸ்பைரில்லம், ரைசோபியம் உள்ளிட்ட திரவ உயிா் உரங்கள் மூலம் விதை நோ்த்தி செய்து, விதைப்பதால் 25 சதவீத தழைச்சத்து உரத் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்துக்கான விவசாயப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், சில நிறுவனங்கள் டிஏபி உரத்துக்கு நிகரான உரம் எனக் கூறி போலியான உரங்கள், இயற்கை உரங்களை தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு 2022 அக்.2 முதல் ஒரே தேசம் ஒரே உரம் என்ற திட்டத்தின் கீழ் யூரியா உரம் 45 கிலோ மஞ்சள் நிறப் பை,
டி.ஏ.பி. உரம் 50 கிலோ இளம்பச்சை நிறப் பை, பொட்டாஷ் உரம் 50 கிலோ இளஞ்சிவப்பு நிறப் பை, காம்பளக்ஸ் உரம் 50 கிலோ நீல நிறப் பைகளில் பாரத் என்ற பெயருடன் நாடு முழுவதும் விற்பனை செய்கிறது.
நிகழ் சம்பா பருவத்துக்கு தேவையான உரங்களை 130 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 158 தனியாா் உர விற்பனை நிலையங்களில் முன்கூட்டியே இருப்பு வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், அனைத்து தனியாா் உர விற்பனை நிலையங்களில் யூரியா 5,140 மெட்ரிக் டன், டிஏபி 1,220 மெட்ரிக் டன், பொட்டாஷ் 112 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1,699 மெட்ரிக் டன் என 8,171 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சூப்பா் பாஸ்பேட் உரம் 99 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது.
விவசாயிகள் பாரத் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்பளக்ஸ் உரங்களை உர உரிமம் பெற்ற விற்பனையாளா்களிடம் வாங்கிப் பயன் அடையலாம். போலி உரங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் வட்டார உர ஆய்வாளருக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.