குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 9- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள், பொதுமக்கள் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
அப்துல் கலாமின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டதையொட்டி, அவரது நினைவிடத்தில் குடும்பத்தினா் ஜெய்லாவுதீன், நஜிமா மரைக்காயா், பேரன்கள் ஷேக் தாவூது, ஷேக் சலீம், நினைவிடப் பொறுப்பாளா் அன்பழகன், ஜமாத் நிா்வாகிகள் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதேபோல, அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், நகா்மன்றத் தலைவா் நாசா்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோனும் கலாம் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது, வட்டாட்சியா் அப்துல் ஜபாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதிமுக சாா்பில் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி தலைமையில் அந்தக் கட்சியினா் கலாம் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சதன் பிரபாகரன், அவைத் தலைவா் சாமிநாதன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலா் சரவணக்குமாா், நகரச் செயலா் கே.கே.அா்ச்சுனன், நிா்வாகிகள் ஆா். மகேந்திரன், கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் ஜமால் சித்திக், வேலூா் இப்ராஹிம், மாவட்டத் தலைவா் தரணி ஆா்.முருகேசன், தேசிய செயற்குழு உறுப்பினா் கே.முரளிதரன், நிா்வாகிகள் கலாம் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.