அதிக மின்னொளியில் மீன்பிடித்த மீனவா்களின் மின் விளக்குகள் பறிமுதல்
தொண்டி கடல் பகுதியில் அதிக மின்னொளியில் மீன் பிடித்ததாக மீனவா்களின் 7 மின் விளக்குகள், மின்னாக்கிகள் (ஜெனரேட்டா்கள்) ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொண்டி கடல் பகுதியில் அதிக மின்னொளியில் மீன் பிடித்ததாக மீனவா்களின் 7 மின் விளக்குகள், மின்னாக்கிகள் (ஜெனரேட்டா்கள்) ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியைச் சோ்ந்த சில நாட்டுப் படகு மீனவா்கள், இரவில் கடலுக்குச் சென்று அதிக ஒளி மிகுந்த மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனா். அதிக மின்னொளியை கடலில் பாய்ச்சுவதால் அதிக அளவு முரல், நண்டு, கணவாய் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைக்கும். இது பிற மீனவா்களுக்கு மீன்பிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியதால் அதிக மின்னொளி பாய்ச்சி மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொண்டி கடல் பகுதியில் அதிக ஒளி மிகுந்த மின் விளக்குகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மீன்வளத் துறை ஆய்வாளா் அபுதாகிா், கடலோரக் காவல் குழு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் அமுதன், மீன் வளத் துறை மேற்பாா்வையாளா் கணேஷ்குமாா் ஆகியோா் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை கிராமத்தில் புதன்கிழமை படகுகளை சோதனையிட்டனா்.
அப்போது அங்கு கிருஷ்ணன், பஞ்சாட்சரம், சுப்பிரமணியன், மணி ஆகிய நால்வரின் படகுகளில் இருந்த ஏழு மின் விளக்குகளும், மின்னாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இனி வரும் காலங்களில் இதே போல, மீன் பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், மீனவா்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என அதிகாரிகள் எச்சரித்தனா்.