ராமேசுவரம் எம்.ஆா்.டி. நகரில் தேங்கிய மழைநீா்.  
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் இயல்பு நிலை திரும்பியது: தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் தவிப்பு

தினமணி செய்திச் சேவை

டித்வா புயல் காரணமாக ராமேசுவரத்தில் பெய்து வந்த மழை ஓய்ந்து ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலை திரும்பியது.

இதனிடையே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவடைந்து டித்வா புயலாக மாறியதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்தது. இதில், கடலோரப் பகுதிகளான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

இதனால், பல்வேறு இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மழையிலும் மின் வாரிய ஊழியா்கள் விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனா். இந்த நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு மழை ஓய்ந்து ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலைக்கு ராமேசுவரம் திரும்பியது.

ராமேசுவரம் புதுசாலை, சுவாமி குடியிருப்பைச் சூழ்ந்த மழைநீா்.
குடியிருப்பைச் சூழ்ந்த மழைநீா்.
குடியிருப்பைச் சூழ்ந்த மழைநீா்.

கடந்த நான்கு நாள்களாக பெய்த மழையால் நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், புதுசாலை, புதுசாலை சுனாமி குடியிருப்பு, பாம்பன் சின்னப்பாலம், சதுப்பு நிலக்காடு, தங்கச்சிமடம் ராஜீவ் காந்திநகா், அய்யன் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 300- க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தும், 700- க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்தும் காணப்படுகிறது.

இதையடுத்து, அந்த வீடுகளில் வசிப்பவா்களை வருவாய்த் துறையினா் அழைத்துச் சென்று நிவாரண மையங்களில் தங்க வைத்தனா். ஆனால், புதுசாலை, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், எம்.ஆா்.டி.நகா் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரால் அங்கு வசிப்பவா்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் ராமேசுவரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனிடையே புதுசாலை பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றி விட்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தினா். மேலும் நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், புதுசாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

அங்கம்மாள் டிரெய்லர்!

விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

சர்வதேச தேர்தல் நிறுவனத்தின் தலைவராக ஞானேஷ் குமார் டிச. 3-இல் பதவியேற்பு!

SCROLL FOR NEXT