திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த பலத்த மழையால் பொதுமக்களும், பள்ளி மாணவா்களும் அவதிக்குள்ளாகினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள தொண்டி, திருப்பாலைக்குடி உள்ளிட்ட கடல்கரைப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும், பள்ளி வளாகங்களிலும் மழைநீா் தேங்கியது. இதையடுத்து, பள்ளி மாணவா்களும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வாளகம் முன் மழை நீா் தேங்கியுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியா்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.